சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ரூ.24,458 கோடி முதலீட்டில் 24 புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அதன்படி, 19,995 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,509 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீடு திட்டமும அடங்கியுள்ளது.
அத்துடன் 4456 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 27,324 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் 5 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், 47 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 385 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் ஒரு நிறுவனத்தின் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட திட்டங்களின் விவரங்கள்:
1) மின்சார வாகனத்துறையிலும் நுகர்வோருக்கேற்ப மின் வாகனங்கள் உற்பத்தியிலும் பெருமளவில் காலடித்தடம் பதித்திருக்கும் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம், சமீபத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த எட்ர்கோ பிவி என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 2,354 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,182 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கக் கூடிய மின்சார இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்தப்பட உள்ளது.
எரிவாயு விநியோகம்
2) டோரண்ட் கியாஸ் சென்னை பிரைவேட் நிறுவனம், சென்னை மற்றும் திருவள்ளூரில் மாவட்டங்களில், நகர எரிவாயு விநியோக வலையமைப்பினை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் செய்யப்பட உள்ள முதலீடு 5,000 கோடி ரூபாய் மற்றும் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
3) அமெரிக்காவில் உள்ள, டெம்பே – ஹரிசோனா வைத் தலைமையகமாகக் கொண்ட முதல் சோலார் நிறுவனம், மேம்பட்ட மெல்லிய திரைப்பட ஒளிமின்னழுத்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி, மெல்லிய திரைப்பட ஒளிமின்னழுத்த சூரிய மாடல்ஸ் (solar Modules) தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் ஆகும். இந்நிறுவனம் 4,185 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,076 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் சூரிய மாடல்ஸ் உற்பத்தியினை மேற்கொள்ள உள்ளது.
4) சொசைட்டி ஸ்மார்ட் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாத்தனூரில், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மையங்கள் மற்றும் எதிர்கால மின்சார வாகனங்கள் இயக்கம் போன்ற வசதிகளுடன், மின்சார வாகனங்களுக்கான தொழிற் பூங்காவை அமைக்க உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும்.
5) வோல்டாஸ் நிறுவனம், அறை குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் வணிக குளிர் பதன தயாரிப்புகளில் தலைமை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடலில், 1,001 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் வணிக குளிர் பதன தயாரிப்புகளுக்கான திட்டத்தினை நிறுவ உள்ளது.
6) மைலன் லேப்பாரட்டிஸ் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு மருந்து உற்பத்தியாளர் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளியில், 350 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில், உயிர் காக்கும் மருந்து உற்பத்தி திட்டத்தினை நிறுவ உள்ளது.
7) சுவிட்சர்லாந்து நாட்டினைச் சேர்ந்த குரித் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காற்றாலை எரிசக்தித் துறையில் நீண்ட காலமாக காலூன்றி வருகின்றது. காஞ்சிபுரத்தில் உள்ள ஒரகடத்தில், 320 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் காற்றாலை தகடுகள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ உள்ளது.
8) லாட்வியா நிறுவனத்தினைச் சேர்ந்த யாக்ளாஸ் நிறுவனம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச இணைய அடிப்படையிலான கல்வி தளத்தினை வழங்கிடும் ஒரு முன்னணி நிறுவனமாகும். சென்னையில் 300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் ஒரு எடுடெக் திட்டத்தினை நிறுவ உள்ளது.
9) கேபிஆர் சுகர்ஸ் அண்ட் அப்பரல்ஸ் லிமிடெட் நிறுவனம், நூல் துணிகள், ஆடைகள் மற்றும் வெள்ளை கிரிஸ்டல் சர்க்கரை போன்ற பல துறைகளில் முதலீடு செய்துள்ள ஒரு ஒருங்கிணைந்த நிறுவனமாகும். திருப்பூரில் உள்ள பெருமணல்லூரில் 250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் ஒரு ஜவுளி ஆலை உற்பத்தி திட்டத்தினை நிறுவ உள்ளது.
10) மேக்னஸ் இன்பிராஸ்டெச்சர் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 200 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 150 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் ஒரு தொழிற் பூங்காவை, சிறப்பு பொருளாதார மண்டலமாக அமைக்க உள்ளது.
11) அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டானடின் நிறுவனம், இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்ட எரிபொருள் மற்றும் காற்று மேலாண்மை அமைப்பு போன்ற உலகளாவிய வாகன தொழில் நுட்பத்தில் ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் எரிபொருள் இன்ஜெக்ஷன் பம்ப் உற்பத்தியினை மேற்கொள்ள உள்ளது.
12) மகேந்திரா சிஐஇ நிறுவனம் உலைக்கள மோட்டார் வாகன உதிரி பாகங்களை தயாரிக்கும் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தினை மேற்கொள்ள உள்ளது.
13) அஞ்சான் மருந்துகள் நிறுவனம், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 60 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் ஒரு மொத்த மருந்துகள் / ஏபிஐ உற்பத்தி திட்டத்தினை மேற்கொள்ள உள்ளது.
14) மைவா பார்மா நிறுவனம், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்காக ஸ்டெர்லைட் லிக்விட் இன்ஜெக்ஷன் தயாரித்திடும் ஒரு நிறுவனமாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 50 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 220 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், இரண்டு அதிவேக குப்பியை நிரப்பும் உற்பத்தி வசதி ஏற்படுத்தி, தனது ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ளது.
15) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஐக்ஹுப் விண்டு ஏசியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், உலக அளவில் கடுமையான நிலைகளைத் தாங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் பற்சக்கர தொழில் நுட்பத்தினை உற்பத்தி செய்திடும் நிறுவனமாகும். இந் நிறுவனம் 410 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 525 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் காற்றாலைகளுக்கான கியர் பெட்டிகள் உற்பத்தி திட்டத்தினை மேற்கொள்ள உள்ளது.
16) டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த க்யூபிக் மாடுலர் ஸ்டெம்ஸ் நிறுவனம், எலக்ட்ரோ மெக்கானிக் துறையில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகும், மேலும், சுரங்கங்கள், விமான நிலையங்கள், கப்பல்கள், தரவு மையங்கள், மருத்துவ மனைகள், மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை ஆலைகள் போன்ற துறைகளிலும் பரவலான தயாரிப்புகள் மேற்கொள்ளும் நிறுவனமாகும். இந் நிறுவனம், 120 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 106 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் ஷீட் மெட்டல் பாக்ஸ் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
17) இத்தாலி நாட்டினைச் சேர்ந்த சபாவ் நிறுவனம், வீட்டு சமையல் சாதனங்களுக்கான குழாய்கள், தெர்மோஸ்டாட்டுகள் மற்றும் எரிவாயு சாதனங்களக்கான பர்னர்கள் போன்றவைகளை உற்பத்தி செய்வதற்காக 5 உற்பத்தி தளங்களைக் கொண்டுள்ளது. 75 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 200 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி திட்டத்தை நிறுவ உள்ளது.
18) சேலம் மாவட்டத்தில், 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், க்ரெவுன் குரூப் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் ஒரு உற்பத்தி திட்டத்தினை நிறுவ உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்தடத்தில் சேலம் மற்றும் இதர முனையங்களில் செயல்படுத்தப்படும்.
அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் தொடங்கப்பட்ட திட்டங்கள்
1) முதலாவதாக, செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், 2,300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் அதானி டேட்டா சென்ட்ர் நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைத்திடும் திட்டம். இத்திட்டம், 23.7.2020 அன்று முதலமைச்சர் முன்னிலையில், மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு திட்டமாகும்.
2) நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் கிராமத்தில், 600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 100 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், பிரான்சு நாட்டினைச் சேர்ந்த டோரண்ட் கியாஸ் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.
3) திருவள்ளூர் மாவட்டம், தேர்வைகண்டிகையில், 536 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 320 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பேட்ர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வார்ப்பு உற்பத்தி திட்டம். இத்திட்டம், 27.5.2020 அன்று முதலமைச்சர் முன்னிலையில், மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த திட்டமாகும்.
4) சென்னையில் உள்ள பெரம்பூரில் 590 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும் வகையில், எஸ்பிஆர் குழுமத்தின் ஐடி பார்க் ஜோன் அண்ட் மார்கெட் பிளாசா திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்.
5) காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில் 430 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், இந்தோஸ்பேஸ் வல்லம் 2 பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற் பூங்கா திட்டம்.
6) சென்னை போரூரில் உள்ள காமர்ஜோன் ஐ.டி.பார்கில் 47 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 385 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், என்பிசிஐ டெவலப்மெண்ட் சென்டர் நிறுவனத்தின் ஐடி / பேக் ஆபிஸ் திட்டம். இந்த மையம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான பேக் எண்ட் நெட்வொர்க்கை நிர்வகிக்கும்.
ஆக, மேற்கூறப்பட்ட திட்டங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழா மேற்கொள்ளப்பட்ட 24 திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு 24,458 கோடி ரூபாய் ஆகும். இத்திட்டங்களில் உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் 54,218 ஆகும்.
சிப்காட் நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், சிப்காட் வல்லம் வடகால் தொழிற் பூங்காவில், பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக, பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே, அனைத்து வசதிகளுடன் தங்குமிட குடியிருப்புகள் அமைத்திட சிப்காட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் பாக்ஸ்கான் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அடுத்ததாக, முதலமைச்சர், சிப்காட் நிறுவனத்தின் ஜிஐஎஸ் இணைய தளத்தினை துவக்கி வைத்தார். சிப்காட் நிறுவனம், மிக நவீன ட்ரோன் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி, தனது தொழில் துறை வளாகங்களில் உள்ள நிலங்கள், மனை அடுக்குகளின் பரப்பளவு, ஒதுக்கப்பட்ட / காலியாக உள்ள இடங்கள், கட்டமைப்பு வசதிகள் போன்ற விவரங்கள் அனைத்தையும் விவரணை செய்து ஒரு புதிய ஜிஐஎஸ் இணைய தளத்தினை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம், சிப்காட் தொழிற்பூங்காகளில் உள்ள நிலங்களை, இருக்கும் இடத்திலிருந்தே இணைய வழியில், முப்பரிமான அமைப்பில் பார்வையிடும் சிறப்பான வசதி, இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக மொத்தம் 24 திட்டங்களால் ரூ.24,458 கோடி முதலீடு, 54,218 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
ஓட்டல் லீலா பேலசில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் கே. சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ. குமரகுருபரன் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் டாரஸ் அகமது, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.