டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் டெல்லி சலோ போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், 40 விவசாயிகள் சங்கங்களைக் சேர்ந்த தலைவர்கள் இன்று டெல்லியின் எல்லையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள். மாநில முதல்வர் கெஜ்ரிவாலும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பஞ்சாப், அரியான உள்பட வடமாநில விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுடன் மத்தியஅமைச்சர்கள் 5 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் 19 நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த 40 தலைவர்கள் இன்று டெல்லி எல்லையின் பல்வேறு பகுதிளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து கூறிய, பாரதிய கிசான் யூனியன்(பிகேயு) அமைப்பின் பொதுச்செயலாளர் ஹரிந்தர் சிங் லகோவால், மத்திய அரசை விழிப்படையச் செய்ய முயற்சிக்கிறோம். எங்களை அரசு தடுத்து முடியாது. இது விவசாயிகள் போராட்டம் அல்ல. மக்களின் போராட்டமாக மாறியுள்ளது. மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளிகள் நலனுக்காக நடக்கிறது. இந்த சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் ஓயாது’ என்று கூறியவர், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 40 தலைவர்கள் இன்று டெல்லி எல்லையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். அடுத்த கட்டமாக, போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்துவோம். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என்றார்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை சிங்கு எல்லையில் 25 பேர், திக்ரி எல்லையில் 10 பேர், உபி எல்லையில் 5பேர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறார்கள்.
இதற்கிடையே டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.