பெங்களூரு :

லகின் முன்னணி மது தயாரிப்பு நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்டின் (யு.எஸ்.எல்.) இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஹினா நாகராஜன் பொறுப்பேற்கவுள்ளார்.

மது விற்பனையில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள இந்த நிறுவனத்திற்குத் தலைமை பொறுப்பேற்கவிருக்கும் முதல் பெண் இவர்தான் என்பதும், மது உற்பத்தி செய்யும் மிகப்பெரும் இந்திய நிறுவனங்களில் தலைமை பொறுப்புக்கு வரும் முதல் இந்தியப் பெண்மணி இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த பொறுப்பில் உள்ள ஆனந்த க்ரிபாலு ஜூன் 30, 2021 ல் பதவி விலக இருப்பதை அடுத்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தற்போது யு.எஸ்.எல். குழுமத்தை நிர்வகிக்கும் டியாஜியோ நிறுவனத்தின் ஆப்பிரிக்க பிராந்திய சந்தையின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஹினா நாகராஜன் விரைவில் அந்த பொறுப்பிலிருந்து விடுபட்டு பெங்களூரில் உள்ள யு.எஸ்.எல்.லின் தலைமை அலுவலகம் வருவார் என்று அந்நிறுவன செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

பதவி விலக இருக்கும் ஆனந்த க்ரிபாலு இடமிருந்து பொறுப்புகளை ஏற்க இருக்கும் ஹினா-வின் பணிகள் சுமூகமாக தொடர இந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

ஐ.ஐ.எம். அஹமதாபாதில் பட்டம் பெற்ற ஹினா, நெஸ்லே இந்தியா, ரெக்கிட் பென்கைஸர் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் விற்பனை பிரிவு தலைமை பொறுப்பை வகித்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஹினா, ஆப்ரிக்க சந்தையில் டியாஜியோ மதுக்களான ஸ்மிர்நாஃப் உள்ளிட்டவற்றின் விற்பனையை உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1, 2021 முதல் யு.எஸ்.எல். நிறுவனத்தில் செய்யப்படும் இந்த மாற்றங்கள் பேக்பைப்பர், ஆர்.சி. உள்ளிட்ட மது விற்பனையில் என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும் என்பது ஹினா வசம் உள்ளது.