மும்பை: ஏபிஎம்சி எனப்படும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தில், விவசாயிகளின் நலன்களுக்காகவே திருத்தம் கொண்டுவர விரும்பினார் சரத்பவார் என்றுள்ளார் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.
காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தபோது, விவசயாத் துறையில் தனியாரும் பங்களிக்கும் வகையில், ஏபிஎம்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென்று முனைந்தார் சரத் பவார். இதுதொடர்பாக, அவர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதினார்.
அவரின், அந்த பழைய நடவடிக்கையை இப்போது சுட்டிக்காட்டி, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவரைக் குற்றம் சுமத்துகிறது பாரதீய ஜனதா. இந்நிலையில், பவாருக்கு ஆதரவாக தற்போது கருத்து தெரிவித்துள்ளார் சிவசேனாவின் சஞ்சய் ராவத்.
“சரத் பவார், அந்த முயற்சியை மேற்கொண்டது விவசாயிகளின் நலனுக்காகவே. அப்போது, அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் பெருந்தலைகள் வேளாண் துறையில் கால் வைக்கவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
ஆனால், இப்போதைய புதிய சட்டங்கள் விவசாயத் துறையை சுடுகாடாக மாற்றுவதோடு, ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் நலன்களையே அழித்துவிடும்” என்றுள்ளார் ராவத்.