புதுடெல்லி: முதுநிலை ஆயுர்வேதா பட்டதாரிகள், அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று வழங்கப்பட்ட அனுமதிக்கு, இந்திய மருத்துவ அசோசியேஷன்(ஐஎம்ஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், டிசம்பர் 11ம் தேதியான இன்று, நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபட்டனர் அந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள்.
இந்தப் போராட்டத்தின் அடிப்படையில், இன்று காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை, அத்தியாவசியமற்ற மற்றும் கொரோனா அல்லாத மருத்துவ சேவைகளை அவர்கள் இன்று மேற்கொள்ளவில்லை.
“ஆயுர்வதே முதுநிலைப் பட்டதாரிகள், அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற அனுமதியானது, நாட்டின் சுகாதார அமைப்பை சீர்குலைப்பதற்கான ஒரு அப்பட்டமான முயற்சி” என்றுள்ளார் ஐஎம்ஏ அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர்.ராஜன் ஷர்மா.
“ஒருவர் மருத்துவராக மாறுவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே, மருத்துவத் துறையில் சமரசம் செய்துகொள்வதானது, தோல்விக்கே இட்டுச் செல்லும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.