கொல்கத்தா :

மே. வங்க மாநில முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி அங்குள்ள மிட்னாபூரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “சொந்த ஆதாயங்களுக்காக பா.ஜ.க., மக்களை பிரித்தாளும் அரசியலில் ஈடுபட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

“வெளியூர்காரர்களின் கட்சியான பா.ஜ.க. மே.வங்காளத்தில் கால்பதிக்க அனுமதிக்க மாட்டேன்” என்று சூளுரைத்த மம்தா, “மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் அடிபணிய மாட்டேன்” என்று தெரிவித்தார்.

“எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.க. அச்சுறுத்தி ஜெயிலுக்கு அனுப்புகிறது” என்று குறிப்பிட்ட மம்தா பானர்ஜி “பா.ஜ.க.வுடன் சமரசம் செய்து கொள்வதை காட்டிலும் சிறைக்கு போக தயாராக இருக்கிறேன்” என ஆவேசமாக கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் மம்தா பானர்ஜி, இந்த பிரச்சாரக்கூட்டத்தில் வறுத்தெடுத்தார்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குண்டர்கள் தங்கள் நிறத்தை மாற்றிக்கொண்டு பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர்” என தெரிவித்த மம்தா “மே.வங்காளத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளும், பா..ஜ.க.வும் கடும் வீழ்ச்சியை சந்திப்பார்கள்” என கூறினார்.

– பா. பாரதி