புதுடெல்லி: இந்திய தலைநகரில் மக்களின் உணவாதாரத்திற்காக போராடி வரும் விவசாயிகளுக்கு, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும், பெரியளவில் தோள்கொடுத்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் தற்போது உச்ச எழுச்சியில் நடைபெற்று வருகிறது. தங்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தும் அதிகார வர்க்கத்திற்கு, அவர்கள் சூடாக பதிலளிக்கிறார்கள்.
“ஆமாம், நாங்கள் தீவிரவாதிகள்தான். அவர்கள் அப்படியே எங்களை அழைத்துக் கொள்ளட்டும். உங்களுக்கான உணவை உற்பத்தி செய்யும் தீவிரவாதிகள்; அதனால்தான் நீங்கள் உண்கிறீர்கள்” என்று பதிலடி கொடுக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தை, ஒட்டுமொத்த குடும்பங்களாக சேர்ந்து நடத்திவருகிறார்கள் விவசாயிகள். அவர்களுக்கு, கல்லூரி படிக்கும் அவர்களின் குடும்பப் பிள்ளைகள் உதவி வருகிறார்கள்.
கொரோனா காரணமாக, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், ஆன்லைன் வகுப்புகளில்கூட, பலரால் கலந்துகொள்ள முடியாத சூழல்.
அந்த மாணவர்கள் கூறுவதாவது, “எங்களின் பாரம்பரியம் ஒரு விவசாயப் பாரம்பரியம். விவசாயிகள் என்பதுதான் எங்களின் அடையாளம். எனவே, எங்களின் மரபைக் காப்பதே முதல் முக்கியம். அதை இழந்துவிட்டு நாங்கள் எதைப் பெறப்போகிறோம். எனவே, போரட்டத்தில் தோள் கொடுத்து நிற்கிறோம்” என்கின்றனர்.