ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்கு, பாரதீய ஜனதா மீண்டுமொருமுறை முயலக்கூடும் என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட்.

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க முயன்ற பாரதீய ஜனதாவினர், அவர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம், தங்களால் கவிழ்க்கப்படும் 6வது ஆட்சியாக இது இருக்கும் என்று தெரிவித்தனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் ராஜஸ்தானின் காங்கிரஸ் முதல்வர் அஷோக் கெலாட்.

‍மேலும், அந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இன்னொரு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரையும் சந்தித்ததாக கெலாட் கூறியுள்ளார்.

ஆனால், “எந்த ஆதாரமும் இல்லாமல் முதல்வர் குற்றம் சாட்டுகிறார் மற்றும் அவரால் உள்கட்சி அதிருப்திகளை சமாளிக்க முடியவில்லை” என்று பாரதீய ஜனதா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரதீய ஜனதா, ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க, மீண்டுமொருமுறை முயலும் என்று குற்றம் சாட்டியுள்ளார் கெலாட்.

“தங்களின் ஆட்சி நடைபெறாத ஒவ்வொரு மாநிலமாக அவர்கள் இதை முயன்று வருகிறார்கள். அடுத்து, அவர்களின் பட்டியலில் மராட்டியம் இருக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்” என்றுள்ளார் கெலாட்.