சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், 6 விக்கெட்டுகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, டி-20 தொடரைக் கைப்பற்றியது.
டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைக் குவித்தது.
பின்னர், சற்று கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்கம் சற்று சிறப்பாக அமைந்தது. கேஎல் ராகுல் 22 பந்துகளில் 30 ரன்களையும், ஷிகர் தவான் 36 பந்துகளில் 52 ரன்களையும்(2 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகள்) அடித்தனர்.
கேப்டன் விராத் கோலி 24 பந்துகளில், 2 சிக்ஸர் & 2 பவுண்டரியுடன் 40 ரன்களை அடித்தார். சஞ்சு சாம்சன் 10 பந்துகளில் 15 ரன்களை அடித்து அவுட்டானார்.
இறுதியில், ஹர்திக் பாண்ட்யாவும், ஷ்ரேயாஸும் ஆட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் வரை தேவைப்பட்டது. பாண்ட்யாவும் ஷ்ரேயாஸும் சிக்ஸர்கள் அடித்து, 19.4 ஓவர்களிலேயே இந்திய அணிக்கு வெற்றியை சாத்தியமாக்கினர்.
பாண்ட்யா, 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களையும், ஷ்ரேயாஸ் 5 பந்துகளில் 12 ரன்களையும் அடித்தனர். இறுதியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஆஸ்திரேலிய அணி 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் வேலைக்கு ஆகவில்லை. ஆண்ட்ரூ டை 4 ஓவர்கள் வீசி, 1 விக்கெட் எடுத்து 47 ரன்களை விட்டுக்கொடுத்தார். எந்தப் பந்து வீச்சாளராலும் தாக்கம் செலுத்த முடியவில்லை. அந்தவகையில், இந்திய அணியின் நடராசன் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களிலேயே சிறப்பாக செயல்பட்டார்.
ஒருநாள் போட்டி தோல்விக்கு பதிலடியாக, டி-20 தொடரை இந்தியா வென்றுள்ளதால், டெஸ்ட் தொடரில் நம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.