டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அரசு வழங்கிய மதிய உணவை புறக்கணித்ததுடன், தாங்கள் கொண்டுவந்த உணவுகைளே சாப்பிட்டனர். மேலும் இடையிடையே வழங்கப்பட்ட தேநீரையும் ஏற்க மறுத்தனர்.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு சமீபத்தில்அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டத்தை தொடங்கி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியாணா மாநில விவசாயிகள் தலைநகர டெல்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த மத்தியஅரசு 1ந்தேதி, 32 விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அது தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களில் உள்ள நிறை குறைகள் குறித்து ஆய்வு செய்ய குழுஅமைக்க வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் விவசாயிகள் அதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், அனைத்து சங்கங்களையும் பேச்சுவார்த்தை அழைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பேச்சுவார்த்தை மதிய நேரத்தையும் தாண்டி தொடர்கிறது.
இடையில் மதிய இடைவேளையின்போது, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளுக்கு அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், விவசாய சங்க தலைவர்கள், அரசு கொடுத்த உணவை ஏற்காமல் தாங்கள் கொண்டு வந்த உணவையே உண்டனர்.
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் ஒருவர் கூறுகையில், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் அரசு கொடுத்த உணவையோ, தேநீரையோ நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் கொண்டு வந்த உணவையே உண்கிறோம் என தெரிவித்தார்.