சென்னை: நிவர், புரெவியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய புயல் நாளை உருவாகி வருகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆந்திரா நோக்கி சென்றது. அதையடுத்து, தற்போது பாம்பனை நோக்கி வரும் புரெவி பெயர் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறதோ என அச்சத்தில் மக்கள் தவித்து வருகின்றன. புயல் பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் பகுதியில் நாளை மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை (டிச.4) மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று கூறியுள்ளது. ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் புயலாக உருவெடுத்துள்ள நிலையில், தற்போது அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.