துபாய்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை ஐசிசி அமைப்பு ஆதரிப்பதாகவும், ஆனால், அதை தாங்கள் மட்டுமே உறுதிசெய்ய முடியாது என்றும் கூறியுள்ளார் ஐசிசி புதிய தலைவர் கிரெக் பார்க்லே.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்த காலங்களில் இருந்தைப்போல், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது கிரிக்கெட் உறவைத் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் புவி-அரசியல் பிரச்சினைகள் என்ன என்பதையும் நான் அறிவேன். எனவே, அவை எதுவும் எனது கட்டுப்பாட்டில் இல்லை. எங்களால் இயலக்கூடிய விஷயம் என்னவென்றால், ஒருவரது நாட்டில் இன்னொருவர் வந்து விளையாட ஏதுவாக உதவியும், ஆதரவும் கொடுப்பது மட்டுமே.

இதைத்தாண்டி வேறெந்த விஷயத்தையும் நடத்திக் காட்டும் அதிகாரம், செல்வாக்கு எனக்கு இல்லை. அது எங்களது செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயம்” என்றுள்ளார் பார்க்லே.

அடுத்தாண்டு, ஐசிசி நடத்தும் டி-20 உலகக் கோப்பையும், 2023ஆம் ஆண்டின் 50 ஓவர் உலகக்கோப்பையும் இந்தியாவில் நடைபெறவுள்ளதால், பாகிஸ்தான் அணி, இந்தியாவிற்கு வந்து ஆடுமா? என்ற கேள்வியும் விரைவில் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.