1983 ஜூலை வெலிக்கடைச் சிறைக் கலவரம், ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் மட்டுமின்றி, உலக அளவிலேயே பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட், இங்கிலாந்திலிருந்து வெளிவரும் இலண்டன் டைம்ஸ் ஆகிய ஏடுகளும் கூட ஈழம் பற்றிப் பேசத் தொடங்கின. ஈழச் சிக்கல் உலகப் பார்வையை ஈர்த்தது.

ஜூலை கலவரம் நிகழ்ந்து, 10 நாள்களிலேயே அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்(04.08.1983) என்னும் ஏடு, கீழ்வருமாறு எழுதியது. “If living together is so hard, what about a separate state in the north for the Tamil’s?. They have as good a claim to a nation of their own as most members of the united nations” (சேர்ந்து வாழ்தல் மிகக் கடினமானது என்றால், வடக்கில் தமிழர்களுக்கான தனிநாடு என்பது என்ன ஆயிற்று? ஐக்கிய நாடுகள் அவையில் மிகப் பல உறுப்பினர்கள் இருப்பது போல அவர்களுக்கும்(தமிழர்களுக்கும்), தங்களுக்கான ஒரு தனிநாட்டைக் கோரும் உரிமை இருக்கத்தானே செய்கிறது.)

இதே போன்ற ஒரு கருத்தினை, ஓராண்டிற்குப் பிறகு, இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஓர் ஏடும் எழுதியது. “இரண்டு இன மக்களின் எண்ணங்களிலும் ஏற்கனவே பிரிவினை வந்துவிட்டது.” The division has already occurred – in the minds of both people (Sunday times, London – 16.12.1984). எண்ணங்களிலேயே பிரிவினை வந்துவிட்ட பிறகு, நிலங்களில் வரையப்படாத பிரிவினைக் கோடுகளால், ஒற்றுமை வந்துவிடாது என்பதையும் இலண்டன் ஏடு அழுத்தமாகச் சொல்லியது.

இவ்வாறு உலகத்தின் கவனத்தையே, ஈர்த்த ஒரு சிக்கல், தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கைச் செலுத்தியது இயற்கையானதுதானே. 1983 ஜூலை இறுதியிலேயே தமிழ்நாடெங்கும், ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் தொடங்கி விட்டன. அதற்கு முன் தமிழகம் கண்டிராத வகையில், கட்சி சார்பற்ற, தன்னெழுச்சியான மக்கள் போராட்டமாக அது அமைந்தது. மாநகரங்கள், நகரங்கள் என்றில்லாமல், சிற்றூர்கள், பட்டிதொட்டிகளில் எல்லாம் மக்கள் ஆதரவு ஊர்வலங்களை, பொதுக்கூட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், அரசியல்வாதிகள் என்று அனைத்துப் பிரிவினரும், அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். நாம் அறிந்த வரையில் ஒட்டுமொத்தத் தமிழகமே, ஒன்றாய்க் கைகோத்து இறங்கிய போராட்டம் அதுவாகத்தான் இருக்கும்.

மக்கள் தொடங்கிய போராட்டத்தில், எல்லா அரசியல் கட்சிகளும் பங்கேற்றுக் களத்தில் இறங்கின. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளின் ஆதரவை, ஈழத்தில் இருந்த போராளிக்குழுக்கள் பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க., விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தது. அவ்வமைப்பிற்கு, நிதியுதவியையும் செய்தது. அங்கிருந்த டெலோ என்னும் போராளி அமைப்பு, கலைஞர் தலைமையிலான தி.மு.க.வின் முழு ஆதரவைப் பெற்றிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈராஸ் ஆகிய அமைப்புகளுக்கு இங்கிருந்த பொதுவுடைமைக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. எனவே இந்தச் சூழலில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பிறக்கட்சிகள் என்னும் வேறுபாடுகள் இல்லாமல், அனைத்துக்கட்சிகளும் களத்தில் இறங்கின. அன்று மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியும், பல போராளிக் குழுக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரித்தது. அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கியது. எனவே அரசுகள், கட்சிகள், தமிழ் அமைப்புகள் ஆகிய அனைத்தின் ஆதரவோடும் நடந்த போராட்டம் என்பதால், இயல்பாகவே அது மிகுந்த எழுச்சி பெற்றதாக இருந்தது.

ஜூலைக் கலவரம் முடிந்த சில நாள்களிலேயே, தி.மு.கழகம் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட பேரணியை நடத்தியது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தில்லியில் இருந்த இலங்கைத் தூதரக வாசலிலும், தி.மு.கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தின.

ஜூலை 31ஆம் தேதி, அனைத்துக் கட்சி உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு, முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து, ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாறு ஒரு மனுவினைக் கொடுத்து வந்தார். அதே ஜூலை 31ஆம் தேதி, தற்செயலாக இராமநாதபுரத்தில் நடைபெற இருந்த தி.மு.கழக மாநாட்டை, ஈழத்தமிழர்ஆதரவு மாநாடாகவே கலைஞர் அறிவித்தார். அம்மாநாட்டில், ஆகஸ்ட் 2ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும், கடை அடைப்பு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு, அந்த நாளில், பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. அந்தப் பொது வேலை நிறுத்தத்தில், நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அதிமுகவின் தலைமையிலான மாநில அரசு, அதற்கு இடையூறும் செய்யவில்லை.

பிறகு, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் சார்பில், ஆகஸ்ட் 4 அன்று, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டமும், 5ஆம் தேதி ரயில் நிறுத்தப் போராட்டமும் நடைபெற்றன. எல்லாப் போராட்டங்களிலும் மக்கள் பெரும் அளவில் பங்கேற்றனர். பிரதமர் இந்திராகாந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் நேரடியாகத் தொலைபேசியில் பேசிய பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்மராவை, இலங்கைக்கு நேரில் அனுப்பி வைத்தார். ஆனால், அங்கிருந்த அகதிகள் முகாமை, நேரடியாகச் சென்று பார்ப்பதற்குக் கூட, நரசிம்மராவுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை.

அப்போது காமராஜ் காங்கிரஸ் கட்சியை நடத்திக் கொண்டிருந்த ப.நெடுமாறன், ஆகஸ்ட் 4ஆம் தேதி மதுரையிலிருந்து, ஆயிரக்கணக்கானவர்களுடன் இலங்கை நோக்கிய தியாகப் பயணத்தை மேற்கொண்டார். இராமேஸ்வரம் வரை நடைப் பயணமாகச் சென்று, பிறகு அங்கிருந்து, படகில் இலங்கை செல்வதாகத் திட்டம். அந்தப் பயணத்திற்கு, வழிநெடுகிலும் மக்கள் ஆதரவு அளித்தனர். இறுதியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி, படகில் ஏறும்போது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தனும், அவருடன் இணைந்து கொண்டார். எனினும், அனைவரும் அங்கு கைது செய்யப்பட்டுப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டும் விதமாக, தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர்களாக இருந்த கலைஞரும், பேராசிரியரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில், ஈழ விடுதலைக்கு ஆதரவாகத் தொடர்ந்து, பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. சென்னை பெரியார் திடலில், வெளியிடப் பெற்ற பல குறும்படங்கள், ஆவணப் படங்கள் ஆகியன தமிழ் மக்களிடையே ஓர் எழுச்சியை ஏற்படுத்தின.

இவ்வாறு தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின் வகைகளும், அளவுகளும் மிகக் கூடுதலானவை என்றே சொல்ல வேண்டும். எனவே அவை அனைத்தையும் இங்கே விவரித்துவிட முடியாது. முதன்மையான சில நிகழ்வுகளை மட்டும் நாம் பார்க்கலாம். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று, டெசோ(Tamil Ezham supporters Organisation) என்னும் ஓர் அமைப்பு தொடங்கப்பட்டதாகும். அவ்வமைப்பு தி.மு.கழகத்தின் முன் முயற்சியில் உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பின் சார்பில் 1986ஆம் ஆண்டு, மே மாதம் மதுரையில், ‘தமிழ் ஈழப் பாதுகாப்பு மாநாடு’ ஒன்று நடைபெற்றது. அதில் அனைத்திந்திய அளவில் பல கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். என்.டி.ராமாராவ், வாஜ்பாய், பகுகுணா, கி.வீரமணி, ப.நெடுமாறன், சுப்பிரமணியன்சாமி, பல்வந்த்சிங் ராமுவாலியா(அகாலிதளம்), அப்துல்ரஷீத் காவிலி(காஷ்மீர் தேசிய மாநாட்டுக்கட்சி), உபேந்திரா(தெலுங்குதேசம்), ஜஸ்வந்த்சிங், அப்துல் சமது, ஆகியோர் அம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். அதனால் அம்மாநாடு, இந்திய அளவில் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது.

                                              டெசோ மாநாட்டுப் படங்கள் – 1986

அம்மாநாட்டில் உரையாற்றிய கலைஞர், “திராவிடர் கழகத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால், இங்கே அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். எதற்காக? நாங்கள் எங்களின் கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு – அறவே மறந்துவிட்டு அல்ல – இலங்கையில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற நாங்கள் எதற்கும் தயார் என்பதற்கான அடையாளமாய்த்தான் இது” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசும்போது, பல்வேறு கட்சிகள், பல்வேறு கொள்கைகளைக் கொண்ட நாங்கள் எல்லோரும், ஒன்றாக இணைந்திருக்கும் இவ்வேளையில் ஈழ விடுதலைக்காகப் போராடும் போராளிக் குழுக்களும், ஒருங்கிணைந்து நிற்க வேண்டாமா என்னும் கேள்வி எங்களுக்கும், உங்களுக்கும் எழாமல் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

அந்தச் சிந்தனையையொட்டி, ஈழப் போராளிக் குழுக்களுக்கு இடையிலான ஒற்றுமை முயற்சியும் நடைபெற்றது. விடுதலைப்புலிகள், டெலோ, ஈராஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகிய போராளிக் குழுக்களின் தலைவர்கள் முறையே பிரபாகரன், சிறீசபாரத்தினம், பாலகுமாரன், பத்மநாபா ஆகியோர் கைகோத்து நிற்கும் படம் அப்போது நாளேடுகள் அனைத்திலும் வெளியாகி ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான்கு அமைப்புகளுக்கும் பொதுவான ஒரு நிர்வாக அலுவலகம் சென்னை, கோடம்பாக்கம், வள்ளாளர் தெருவில் நிறுவப்பட்டது.

எனினும் எல்லா முயற்சிகளும், அதற்கு அடுத்த ஆண்டே ஒரு பின்னடைவுக்கு உள்ளாகின. இந்திராகாந்திக்குப் பிறகு, ராஜீவ்காந்தி இந்தியாவின் பிரதமர் ஆன பிறகு, மத்திய அரசின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக வெளியுறவுத்துறைச் செயலாளராக ரமேஷ் பண்டாரி நியமிக்கப்பட்ட பிறகு, அந்த மாற்றம் மேலும் கூடுதலாயிற்று. போராளிக் குழுக்களுக்கு ஆதரவாக இருந்த இந்திய அரசு, மெல்ல மெல்ல இலங்கை அரசுக்கு, ஆதரவான நிலை எடுக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்றுவிட்டார். போராளிக் குழுக்களுக்கான மத்திய அரசின் ஆதரவு குறைந்ததற்கு அதுவும் ஒரு காரணமாயிற்று.

1987ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவுப் போராட்டம் இரண்டாம் கட்டத்தைச் சந்தித்தது. 1987 ஜூலை 29 அன்று, இந்திய அரசும், இலங்கை அரசும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன் அடிப்படையில், இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. தங்களைப் பாதுகாக்கவே வருகிறார்கள் என்ற நம்பிக்கையில் அப்படையை அங்கு மக்கள் முதலில் வரவேற்றனர். ஆனால் காலப்போக்கில், இந்திய அமைதிப்படை இலங்கை அரசுக்கு ஆதரவாக ஒருபக்கச் சார்புடன் நடந்து கொள்ளத் தொடங்கிற்று.

இந்திய அரசின் நிலையை எதிர்த்து, தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் போராட்டங்கள் தொடங்கின. குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு, அமைதிப்படையை ஆயுத ரீதியாகவே எதிர்கொள்ளத் தொடங்கிற்று. தமிழகத்தின் போராட்டங்கள் பற்றியே நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதால், ஈழத்தில் நடந்த போராட்டங்களை இங்கு விரித்துச் சொல்வதற்கு இடமில்லை. எனினும் கரும்புலி மில்லர், .பட்டினிப் போர் நடத்தி, உயிர் துறந்த மருத்துவக்கல்லூரி மாணவன் திலீபன் ஆகியோரின் தியாகங்கள், தமிழகத்திலும் பெரும் எழுச்சியை உருவாக்கின.

முதல் கட்டத்தில்(1983-87) இருந்ததைப் போல, 1987இல் ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு இந்திய அரசின் ஆதரவு இல்லை. மாறாக, கடும் எதிர்ப்பு இருந்தது. தமிழக அரசும் மௌனமாகிவிட்டது. எனினும், தி.மு.க., திராவிடர்கழகம், தமிழர் தேசிய இயக்கம் ஆகிய கட்சிகளும், திரைப்பட இயக்குனர் வி.சி.குகநாதன், கவிஞர் மு.மேத்தா ஆகியோரின் முன்முயற்சியால் தொடங்கப்பட்ட ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு போன்ற தமிழ்ஈழ ஆதரவு அமைப்புகளும் போராட்டத்தை வலிமையாக முன்னெடுத்தன.

கரும்புலி மில்லர்
திலீபன்

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மில்லர், திலீபன் ஆகிய இருவரின் தியாகங்களும் இருவேறு வகையிலானவை. 1987 ஜூலை மாதம் தன் உடம்பு முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு, நெல்லியடி என்னும் இடத்தில் இருந்த சிங்கள இராணுவக் கிடங்கில் மோதி, அந்தக் கிடங்கையும் அழித்து, தானும் தூள்தூளாகச் சிதறிப் போனார் மில்லர். 1987 செப்டம்பர் 15ஆம் நாள் பட்டினிப் போரைத் தொடங்கி, ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் 11 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து, 26ஆம் தேதி இறந்து போனார் திலீபன். இவர்கள் இருவரின் தியாகங்களும் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய எழுச்சியை, அரசின் அதிகாரங்களால் தடுத்துவிட முடியவில்லை. எங்கு நோக்கினும், ஊர்வலங்கள், மனிதச் சங்கிலிப் போராட்டங்கள், நீண்ட பயணங்கள் என்று தமிழகமே போர்க்கோலம் பூண்டது.

1987 நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை, தமிழ்நாடு எங்கும் இந்திய அமைதிப் படையை எதிர்த்தும், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், தி.மு.கழகம் பொதுக் கூட்டங்களை நடத்தியது. சேலத்திலும், வேலூரிலும் கலைஞர் கலந்து கொண்டு பேசினார். இளைஞர்களிடம் ஏற்பட்ட எழுச்சி, தீக்குளிப்பு வரையில் சென்றது. 18.11.1987 அன்று, விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் என்னும் ஊரைச் சேர்ந்த உதயசூரியன் என்னும் தி.மு.கழக இளைஞர் ஒருவர், ஈழ விடுதலைக்கு ஆதரவாகத் தன்னைத்தானே எரித்துக் கொண்ட அந்த நிகழ்வு போராட்டத்திற்கு மேலும் புத்துணர்வூட்டியது .

1987 இறுதியில், எம்.ஜி.ஆர். இறந்துபோனார். 1989 தேர்தலில், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு கலைஞர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். இலங்கையிலும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஜெயவர்த்தனாவுக்கு அடுத்து, பிரேமதாசா அதிபரானார். இப்போது அங்கு இலங்கை அரசும், விடுதலைப் புலிகளுமாகச் சேர்ந்து இந்திய அமைதிப் படைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வேறுவழியின்றி, இந்திய அமைதிப்படை 1990இல் படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டது.

“என் தமிழ் மக்களைக் கொன்றுவிட்டுத் திரும்பும் இந்திய அமைதிப்படையை நேரில் சென்று என்னால் வரவேற்க இயலாது” என்று கூறிய அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர், தமிழ் ஈழ ஆதரவுப் போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அதனை ஆக்கினார் என்றே கூற வேண்டும்.

இருப்பினும், 1991ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டப் பிறகு, நிலைமைகள் முற்றிலுமாக மாறின. மத்தியில் இருந்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் புதிதாய்ப் பதவிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசும்,தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில், அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டன.

ராஜீவ் கொலைக்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு – குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரானதாகவே மாறிவிட்டது. எம்.ஜி.ஆரின் ஈழ ஆதரவு நிலைக்கு, நேர் எதிரான நிலையை ஜெயலலிதா முன்னெடுத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து, அது நடைமுறைக்கு வருவதற்கு ஒரு காரணமாகவும் இருந்தார். தமிழ்நாட்டில் ஈழ விடுதலையை ஆதரிப்போருக்குத் தடா, பொடா ஆகிய கடுமையான சட்டங்களின் கீழ் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இங்கு அழைத்து வந்து, தூக்கில் ஏற்ற வேண்டும் என்று கூறும் அளவிற்கு ஜெயலலிதா சென்றார்.

தி.மு.க.வைப் பொறுத்த வரையில், ஈழத்திற்கு ஆதரவாக இருந்தாலும், புலிகளுக்கான ஆதரவை, ராஜிவ் கொலைக்குப் பிறகு முன்னெடுக்கவில்லை. அதேநேரத்தில் ஜெயலலிதாவைப் போலப் புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

கடுமையான அரசின் ஒடுக்குமுறைகளுக்கு இடையில் ஈழ ஆதரவுப் போராட்டம், மக்கள் போராட்டமாக இல்லாமல், சில குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் போராட்டமாக மாறிவிட்டது. அந்நிலையில் தி.க., ம.தி.மு.க., பா.ம.க., தமிழர் தேசிய இயக்கம், தமிழ் அமைப்புகள் ஆகியனவற்றின் போராட்டங்கள் தொடரவே செய்தன. 2009ஆம் ஆண்டு, ஈழத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு வரையில், அப்போராட்டங்கள் இங்கு தொடரவே செய்தன.

(களங்கள் தொடரும்….)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================

1. நெடுமாறன், பழ – “பிரபாகரன் – எழுச்சியின் வடிவம்” – தமிழ்க் குலம் பதிப்பகம், சென்னை – 43.

2. பாவை சந்திரன் – “ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு” – கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை – 17.

3. இராதாகிருஷ்ணன், கே.எஸ். – “கலைஞரும் ஈழத்தமிழரும்” – தென்றல் வெளியீடு, சென்னை.

4. அய்யநாதன், கா, – “ஈழம் அமையும்” – கிழக்குப் பதிப்பகம், சென்னை-14.

5. ஜெகத் கஸ்பர், அருட்தந்தை – “வீரம் விளைந்த நிலம் (நான்கு தொகுதிகள்)” – நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை – 14.

6. வீரபாண்டியன், சுப, – “ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்” – திமுக தலைமை நிலையம், சென்னை-18

7. திருநாவுக்கரசு, மு, – “தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்” – தமிழ் படைப்பாளிகள் முன்னணி, சென்னை – 106.

8. கணேசன், வெ, முனைவர் – “திமுகவும் இலங்கைத் தமிழர் நலனும்” – டுடே கிராபிக்ஸ், சென்னை – 5.

9. Sivnayagam, S,- “The Pen and The Gun” – Tamil information Centre Publication, London, U.K.

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.