பெங்களூரு

வ்வொருவரும் ஜாதி மத பேதமின்றி தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அவரவர் அடிப்படை உரிமை எனக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச பாஜக அரசு இஸ்லாமிய ஆண் மற்றும் இந்துப் பெண் திருமணத்தை லவ் ஜிகாத் எனக் கூறி எதிர்த்து வருகிறது.  மேலும் இதைத் தடை செய்யச் சட்டம் இயற்ற வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். தற்போது கர்நாடக பாஜக அரசும் இதே கருத்தைத் தெரிவித்து வருகிறது.   இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில்  இதற்கு எதிராக தீர்ப்பு அளித்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி பொறியாளர்கள் வாஜித் கான் மற்றும் ரம்யா காதலர்கள் ஆவார்கள்.  இவர்களது திருமணத்துக்கு வாஜித் தாய் சம்மதித்துள்ளார்.  ஆனால் ரம்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  அவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்த போது காவல்துறைக்கு அளித்துள்ள புகாரின் அடிப்படையில் ரம்யா மகளிர் சங்க பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டார்.

வாஜித் கான் தனது காதலி ரம்யாவை காண ஆட்கொணர்வு மனுவை பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் அளித்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் சுஜாதா மற்றும் சச்சின் சங்கர் ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்பட்டது.   அப்போது மகளிர் சங்க பொறுப்பில் இருந்த ரம்யா நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.  ரம்யா தனக்கு வாஜித் கானை திருமணம் செய்துக் கொள்ள முழு சம்மதம் உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையொட்டி பெங்களூரு உயர்நீதிமன்றம், “ரம்யா ஒரு படித்த ஐடி பொறியாளர் ஆவார்.  அவர் தனது வாழ்க்கை குறித்து முடிவு செய்வதில் தவறு இல்லை. எனவே அவரை மகளிர் சங்க பொறுப்பில் இருந்து விடுவிக்கிறோம்.  மேலும் அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி ஜாதி மத பேதமின்றி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமையாகும்.   இதை யாராலும் தடுக்க முடியாது” எனத் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு  லவ் ஜிகாத் எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற விரும்பும் பாஜக அரசுக்கு கடும் பின்னடைவை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த தீர்ப்பையொட்டி கர்நாடக அரசியல் களத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.