மனாமா: பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களில் ஒருவரான ரொமைன் குரோஸ்ஜீனின் கார், சுவற்றில் மோதி தீவிபத்திற்கு உள்ளானது. ஆனால், அந்த விபத்திலிருந்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் ரொமைன் குரோஸ்ஜீன்.
தற்போது 34 வயதாகும் ரொமைன் குரோஸ்ஜீன், சிறிய காயங்களுடன் தப்பிவிட்டதாக கூறியுள்ளார் செய்தித் தொடர்பாளர் ஒருவர்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கைகள் மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட சிறியளவு காயங்கள் தவிர, அவருக்கு வேறெந்த ஆபத்தும் நேரவில்லை. அவர், தற்போது தனது மருத்துவர்களுடன் இருக்கிறார். அதேசமயம், மேலதிக தேவைகளுக்காக, தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் ரொமைன் குரோஸ்ஜீன்” என்றுள்ளார் அவர்.
அதேசமயம், அவருக்கு(ரொமைன் குரோஸ்ஜீன்) விலா எலும்புகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஐயப்பாட்டின்படி, அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பெரிய தீ விபத்து ஏற்பட்டதும், கார் பந்தயப் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. அவரின் கார் எப்படி ஸ்டீல் தடுப்புகளைத் தாண்டி சென்றது என்பது கேள்வியாக உள்ளது.