வதோதரா: குஜராத் பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து வழங்கிய கும்பல் மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் அவர்கள் 7 ஆண்டுகளாக இந்த முறைகேடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
குஜராத்தின் வதோதரா பகுதியில் பல்வேறு பல்கலை கழகங்களின் போலியான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டங்கள் நடமாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, அதை கண்டுபிடிக்கும் வகையில் காவல்துறையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு ரகசிய விசாரணை நடைபெற்றது. அப்போது, வதேரா பகுதியில் ஒரு கும்பல், மாநிலத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் பெயரில் போலியாக மதிப்பெண் சான்றிதழ் உள்பட அனைத்து சான்றிதழ்ர்களையும் வழங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
அந்த கும்பலிடம் இருந்து, போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்க உதவிய 3 கணினிகள் மற்றும் மின்னணு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலியான சான்றிதழ்களையும் கைப்பற்றி உள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும், லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்தும் தெரிய வந்துள்ளது.
‘இதனை தொடர்ந்து, அவர்கள் போலியாக சான்றிதழ் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பல்கலைகழகங்களில் பணிபுரிபவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? யாரெல்லாம் போலி சான்றிதழ்கள் பெற்றுள்ளனர் என்பதும் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே கடந்த 2ந்தேதி போலி மதிப்பெண்களை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட மூன்று பேரை சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி) கைது செய்தது. வதேரா பகுதியில், அட்லடாராவில் வசிக்கும் பூஷிரா படேல் என்ற பெண், ஏழை மக்களுக்கு போலி மதிப்பெண்களை விற்பனை செய்து வந்ததாகவும், அவரது வீட்டில் சோதனை நடத்தி, மதிப்பெண்கள் சான்றிதழ்களைப் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.