வாஷிங்டன்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரு வாரங்களுக்கு பிறகு டிரம்ப்பின் தோல்வியை அமெரிக்க பொதுச் சேவை நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் மோதினர்.   இதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வந்து இரு வாரம் ஆகியும் இது குறித்து அமெரிக்க பொதுச் சேவை நிர்வாகம் ஜோ பைடன் வெற்றியையும் டிரம்பின் தோல்வியையும் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தது.   டிரம்பின் பதவிக்காலம் ஜனவரி மாதத்தில் முடிய உள்ளது.

ஆயினும் டிரம்ப் பதவி விலகல் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில் ஜோ பைடன் தனது அதிபர் பதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி உள்ளார்.  ஏற்கனவே அவர் தனது அமைச்சரவை சகாக்கள் குறித்து அறிவித்திருந்தார்.   ஆனால் அதிகாரப்பூர்வமாக டிரம்ப் விலகுவது குறித்த அறிவிப்பு வராததால் அவரது அமைச்சரவை விவகாரம் அறிவிப்புடன் நின்றது.

இந்நிலையில் அமெரிக்கப் பொதுச்சேவை நிர்வாகம் நேற்று ஜோ பைடனுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தனது பதவி விலகல் நடவடிக்கைகளை தொடங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.   இந்த கடிதம் டிரம்பின் தோல்வியையும் பைடனின் வெற்றியையும் அரசு ஒப்புக் கொண்டுள்ளதற்கு முதல் படியாகும்.   இது தேர்தல் முடிந்து இரு வாரம் கழித்து நடந்துள்ளது.

இந்த கடிதத்தை எழுதி உள்ள அமெரிக்கப் பொதுச்சேவை நிர்வாகி எமிலி மர்பி, “நான் எனது முடிவைச் சுதந்திரமாகவும் சட்டப்படியும் எடுத்துள்ளேன் என்பதைத் தயவு செய்து அனைவரும்  புரிந்துக் கொள்ளுங்கள்.  என்னை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ வெள்ளை மாளிகை மற்றும் பொதுச்சேவை நிர்வாகத்தின் எந்த ஒரு அதிகார வளையமும் நிர்ப்பந்தம் செய்யவில்லை.   மேலும் எனது முடிவைத் தாமதப்படுத்த யாரும் வலியுறுத்தவில்லை.  இவை எனது சொந்த முடிவு ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜோ பைடனின் நிர்வாக இயக்குநர் யோகன்னஸ் ஆபிரகாம், “தற்போது நாடு கொரோனா உள்ளிட்ட பலவற்றால் கடும் சவாலை எதிர்கொண்டுள்ள வேளையில் பொருளாதார சீர்திருத்தம் போன்றவற்றுக்கு டிரம்ப் பதவி விலகி புது நிர்வாகம் பதவியில் அமர்வது அவசியமாகும்.   எனவே டிரம்ப் பதவி விலகல் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்னும் அறிவிப்பு நாட்டுக்கு மிகவும் நன்மை பயக்கும் செய்தியாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.