சென்னை: தமிழகத்தில் இன்று மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழகஅரசு வெளியிட்ட ரேங்க் பட்டியலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 34 மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வெளி மாநில மாணவர்களுக்கு, தமிழகத்தில் வசிப்பதாக போலியான இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகஅரசு இந்த தில்லுமுல்லு நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக தலைவரும் இதுதொடர்பாக குற்றம் சாட்டியிருந்தார். அவரது அறிக்கையில், 2020-21-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு பட்டியலில், முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5-ஆம் இடத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும் உள்ளன. இன்னும் தொடருகிறது அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியல் முறைகேடுகளும், முன்னுக்குப்பின் முரண்பாடுகளும் தொடர்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 34 மாணவர்களின் பெயர் பட்டியல், தமிழகத்தில் நடைபெறும் மருத்துவ கலந்தாய்வுக்கான ரேங்க பட்டியலில் இடம்பிடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.