பாட்னா :
பீகார் மாநில மேல்சபைக்கு பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் இருந்து 8 உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க வேண்டி இருந்தது. இதற்கான தேர்தல் கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றது.
ஓட்டு எண்ணிக்கை வியாழக்கிழமை தொடங்கி மறுநாள் முடிவடைந்தது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களில் வென்றது. இந்த தொகுதிகள் ஏற்கனவே அந்த கட்சிகள் ஜெயித்த தொகுதிகள் தான்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜாவும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் முன்பு ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றிருந்த தர்பங்கா, ஆசிரியர் தொகுதியில் அந்த கட்சி தோற்றுப்போனது. ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் திலீப்குமாரை சுயேச்சை வேட்பாளர் சர்வேஷ் குமார் என்பவர் தோற்கடித்தார்.
ஏற்கனவே சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பலத்த அடி வாங்கியுள்ள நிலையில் எம்.எல்.சி. தேர்தலிலும் அந்த கட்சி வேட்பாளர் சுயேச்சையிடம் தோல்வி அடைந்திருப்பது, கட்சி தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.
– பா. பாரதி