சென்னை: அதிமுக அரசு மக்களுக்கான அரசு என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது, கொரோனா வைரஸ் உலகம் பரவி உலக நாடுகளை ஆட்கொண்டுள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அரசின் அறிவிப்புகளுக்கு மக்களும் நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார்கள் என்றார்.
தமிழக அரசைப் பொறுத்தவரை எந்த முடிவையும் தானாக எடுப்பது கிடையாது, அதற்குரிய நிபுணர்களிடம் தகுந்த ஆலோசனைகளைப் பெற்றே செயல்படுகிறது. இதில் அரசியலை விட அறிவுபூர்வமாக மட்டுமே அணுக வேண்டும். கொரோனா விஷயத்தில் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. எனினும், மாணவர்களின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்பதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டது.
ஆனால், பள்ளிகள் திறக்க கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தள்ளிவைக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். அதையடுத்தே, அதிமுக அரசு மக்களுக்கான அரசு என்பதன் உதாரணமாக பள்ளிகள் திறப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கருத்துக்கு மதிப்புக் கொடுத்து வீண் பிடிவாதம் இல்லாமல் அரசு செயல்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. பொது நோக்கம் மட்டுமே”.
இவ்வாறு கூறினார்.