சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில், சென்னை உள்பட பல மாவட்டங்களில்  நேற்றிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு மட்டுமின்றி, மக்களும் வீட்டை விட்டுவெளியே செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது, பெய்து வரும் மழை காரணமாக  மீண்டும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில்,  ‘தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை முதல் வடதமிழகத் கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் .

அடுத்த 24 (12.11.2020) மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

அடுத்த 48 (13.11.2020) மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அடுத்த இடைவெளிவிட்டு மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், அண்ணா பல்கலை, மண்டபம் (ராமநாதபுரம் ) தலா 3 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், எண்ணூர் (திருவள்ளூர்), மயிலாடுதுறை (நாகப்பட்டினம்), ஆலந்தூர், சென்னை விமான நிலையம் தலா 2 செ.மீ., வலங்கைமான், பெரம்பலூர், திருச்செந்தூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வறு அதில் கூறப்பட்டு உள்ளது.