சென்னை
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் வர உள்ளதால் குடிநீர் விநியோகம் அதிகரிப்பது குறித்து குடிநீர் வாரியம் பரிசீலித்து வருகிறது.
கடந்த ஆண்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கி வரும் 4 ஏரிகளில் 3,085 மில்லியன் கன அடி நீர் இருந்தது. இந்த ஆண்டு அது 6,340 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளியூர் சென்ற பலரும் சென்னைக்குத் திரும்பி உள்ளனர். எனவே குடிநீர்த் தேவையும் அதிகரித்துள்ளது.
அது மட்டுமின்றி ஆந்திர அணைகளில் குறிப்பாக கண்டலேறு அணையில் நீர் இருப்பு அதிக அளவில் உள்ளதால் கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு முழு அளவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு தற்போது விநாடிக்கு 400 கன அடி நீர் வரத்து உள்ளது. இதைத் தவிரப் பருவமழை காரணமாக ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இதையொட்டி தமிழக குடிநீர் வாரியம், “தற்போது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தினசரி 700 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இது வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன், கடல்நீரைக் குடிநீராக்கும் 2 நிலையங்களில் இருந்து 140 மில்லியன், மற்ற ஏரிகளில் இருந்து 370 மில்லியன், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 10 மில்லியன் என மொத்தம் 700 லிட்டர் வழங்கப்படுகிறது.
தற்போது கிருஷ்ணா நதி நீர் வரத்து உள்ளதாலும் பருவமழைக்கு நல்ல வாய்ப்புள்ளதாலும் குடிநீர் ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது. அவை நிரம்பும் போது தற்போது வழங்கப்பட்டு வரும் 700 மில்லியன் கன அடி நீரை மேலும் அதிகரித்து 800 மில்லியன் கன அடி நீராக வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.