டில்லி

ர்னாப் கோஸ்வாமியின் ஜாமின் மனு அவசர வழக்காக எடுத்துக் கொண்டதற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுமார் 4 வருடம் முன்பு ஆர்கிடெக்ட் ஒருவருக்கு ரிபப்ளிக் டிவி பணம் தராமல் இழுக்கடித்ததால் அவர் தற்கொலை செய்துக் கொண்டார்.  தனது மரணத்துக்கு ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி காரணம் என தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்தார்.  அப்போது பாஜக ஆட்சி நடைபெற்று வந்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இப்போது அந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இதையொட்டி கடந்த புதன்கிழமை அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த அலிபாக் காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.  அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.   அவருக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை நிராகரித்து விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிடப்பட்டது.  எனவே அலிபாக் விசாரணை நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு மீது விசாரணை நடந்து வருகிறது.    மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததை எதிர்த்து அர்னாப் கோஸ்வாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இது அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று இந்த அவசர மனு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட உள்ளது.   இது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவே உச்சநீதிமன்ற பொதுச் செயலருக்கு ஒரு கடிதம் எழுதி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

தவே தனது கடிதத்தில் “கடந்த 8 மாதங்களாக  கொரோனா தொற்று காரணமாக நீங்கள் வழக்குகளை வரிசைப்படுத்துகிறீர்கள்.  தற்போது ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமின் கோரி உள்ளனர்.   ஆயினும் அவர்கள் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் உள்ளது.

எனக்கு அர்னாப் கோஸ்வாமியுடன் தனிப்பட்ட பிரச்சினை ஏதுமில்லை.  உச்சநீதிமன்றம் மற்ற குடிமகன்களைப் போல் அர்னாப் கோஸ்வாமியையும் நடத்த வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.   இவ்வாறு அவருக்கு முன்னுரிமை அளிப்பதால் இது எங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. “ எனக் குறிப்பிட்டுள்ளார்.