மும்பை

பீகார் தேர்தல் சமயத்தில் தேஜஸ்வி யாதவின் செயல்பாட்டை சரத் பவார் மற்றும் பிரித்விராஜ் சவான் உள்ளிட்டோர் புகழ்ந்துள்ளனர்.

நடந்து முடிந்த பீகார் தேர்தலில் அனுபவம் வாய்ந்த நிதிஷ்குமார் அணியை எதிர்த்து இளைஞரான தேஜஸ்வி யாதவ் அணி போட்டியிட்டது.   இதில் நிதிஷ்குமார் அணி மீண்டும் வென்று ஆட்சியைப் பிடித்தது.   அந்த அணிக்குச் சற்றே குறைவாகத் தேஜஸ்வி அணி வெற்றி பெற்ற போதிலும் பல இடங்களில் மிக மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தேஜஸ்வி அணி தோல்வியைச் சந்தித்தது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “இந்த தேர்தல் சமயத்தில் தேஜஸ்வி யாதவின் செயல்பாடு மிகவும் அருமையாக இருந்தது.   இந்த தேர்தலில் பிரதமரே ஆர்வம் காட்டி உள்ளார். ஒரு புறம் அனுபவம் இல்லாத இளைஞரான தேஜஸ்வி அணியும் மற்றொரு புறம் குஜராத் முதல்வராகப் பல வருடங்கள் பதவி வகித்தவரும் பிரதமராக இரண்டாம் முறையும் தேர்வு செய்யப்பட்டவரான மோடியும் போட்டியிட்டனர்.

மோடி மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்றால் நிதிஷ்குமார் பல முறை முதல்வர் பதவி வகித்துள்ளார்.  அத்துடன் மத்திய அமைச்சராகவும் பணி புரிந்துள்ளார்.    அவ்வளவு பலம்  பொருந்திய தலைவர்களை ஒரு இளைஞர் எதிர்த்துள்ளார்.  அவர் அணி எத்தனை இடங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் சரி, அவரது இந்த முயற்சி பல இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்” எனக் கூறி உள்ளார்.

சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞய் ரவுத்.”பீகார் தேர்தல் மூலம் தேஜஸ்வி யாதவ் ஒரு கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.  அவர் ஆளும் கட்சிகளான பாஜக மற்றும் ஐஜத கட்சிகளை எதிர்த்தது மிகவும் போற்றத்தக்கதாகும்.   தேஜஸ்வி மட்டுமே பீகார் தேர்தலின் ஆட்ட நாயகன்” எனக் கூறி உள்ளார்.

முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரித்விராஜ் சவான், “இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தனது முதிர்ச்சியையும் போர்க்குணத்தையும் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார்.  அவர் இளைஞர் என்றாலும் ஒரு முதிர்ந்த தலைவர் போல செயல்பட்டுள்ளார்.  அவர் மெகா கூட்டணியைத் திறம்பட முன்னின்று நடத்தி உள்ளார்” எனக் கூறி உள்ளார்.