ராவல்பிண்டி: ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்று வருகிறது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில், டி20 தொடர் துவங்கியது. இதில் முதல் போட்டியை பாகிஸ்தான் வென்ற நிலையில், இரண்டாவது போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக சோபிக்கவில்லை. ரியான் பர்ல் எடுத்த 32 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். இறுதியில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது ஜிம்பாப்வே அணி.
பின்னர், எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், பாபர் ஆஸம் 28 பந்துகளில் 51 ரன்களையும், ஹைதர் அலி 43 பந்துகளில் 66 ரன்களையும் அடித்து ஆட்டத்தை முடித்தனர்.
பிற பேட்ஸ்மென்களுக்கு பெரிதாக வேலை எதுவும் இருக்கவில்லை. இறுதியில், 15.1 ஓவர்களிலேயே 2 விக்கெட் மட்டுமே இழந்து 137 ரன்களை எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.