பாட்னா :
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அவரது மகன் சிராக் பஸ்வான் தலைமையில் அந்த அந்த கட்சி தேர்தலை எதிர்கொள்கிறது. பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிராக் பஸ்வான், “பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி வெற்றி பெற்று பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.
“இரண்டு, மூன்று பேர் முதல்-அமைச்சர் போட்டியில் உள்ளனர்” என்று குறிப்பிட்ட சிராக் பஸ்வான் “பொதுவெளியில் அவர்கள் பெயரை தெரிவிக்க முடியாது” என்றார்.
“இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாருக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தேஜஸ்வியிடம் ஆதரவை கோருவார்” என்று கூறிய சிராக் பஸ்வான், “தேவைப்பட்டால் ராஞ்சி சிறைச்சாலைக்கு சென்று லாலு பிரசாத் யாதவிடம் மண்டியிட்டு, தலைகுனிந்து அவரது ஆதரவை கேட்க தயங்க மாட்டார்” என்று தெரிவித்தார்.
– பா.பாரதி