பெங்களூரு: கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக,  தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஒடிசா, ராஜஸ்தான்,டெல்லி மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கி உள்ளது. ஆனால், இந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக, பட்டாசு விற்பனை சூடுபிடிக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தீபாவளி பண்டிகையையொட்டி, தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுகள் விற்பனையாகாத நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக பட்டாசு தொழிலையே நம்பியுள்ள சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்கள், அதில் வேலை செய்பவர்கள், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று பொது இடங்களில் காலை மற்றும் மாலையில் தலா ஒரு மணி நேரம் வீதம் மொத்தம் 2 மணி நேரம் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் காற்று மாசு  காரணமாக கொண்டு, ஒடிசா ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரு மாதங்களுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டெல்லியிலும் பட்டாசு வெடிக்க தடை  விதிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கூறிய முதல்வர் கெஜ்ரிவால், தலைநகர் டெல்லியில், நாளை முதல் நவம்பர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவித்து உள்ளார். தடை விதிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார்.  ஊடகங்களிடம் பேசிய பி.எஸ்.எடியூரப்பா, “கோவிட் -19 மற்றும் பிற காரணங்களால், இந்த ஆண்டு தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு நாங்கள் விவாதங்களை நடத்தினோம். விரைவில் அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்படும். ” என்று கூறியுள்ளார்.