சென்னை: திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட பாஜகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். திருத்தணி காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர்.

தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, யாத்திரை  இன்று (நவ. 6) திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என, தமிழக அரசு தெரிவித்தது.  இந்த நிலையில் தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை சென்னையில் இருந்துவேல் உடன் யாத்திரையாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஏராளமான வாகனங்களுடன் திருத்தணி சென்றார். முன்னதாக அங்கு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  திருத்தணிக்கு வேலுடன் சென்ற எல்.முருகன்,  அங்குள்ள பிரசித்தி பெற்ற  முருகன் கோவிலில் வழிபட்டு வேல் யாத்திரையை தொடங்கினார்.  இந்த நிகழ்வில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று கூறி பாஜக தலைவல் எல்.முருகன் உள்பட ஏராளமானோரை கைது செய்தனர்.

திருத்தணியில் அசம்பாவிதங்களை தவிர்க்க டிஐஜி சாமுண்டீஸ்வரி மற்றும் ஐ.ஜி.நாகராஜன் தலைமையில் திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக   கோயம்பேட்டில் இருந்து பிரச்சார வேனில் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் திருத்தணி புறப்பட்டுச் சென்றனர். கோயம்பேடு பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழியில், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில், பாஜகவினர் வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், எல்.முருகன் வாகனம் மட்டும் செல்ல அனுமதித்தனர். சுமார் 300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

இதனிடையே, வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் சென்னை ரெட்டேரி சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரம்பூர், கோயம்பேடு, செங்குன்றம், மாதவரம் செல்லும் ஆகிய 4 வழிகளிலும் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்

இந்நிலையில், வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரிப் பகுதியில் இருந்து இன்று (நவ. 6) ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக பாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்தனர்.