கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு மிரட்டுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் – மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக முன்னாள் தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்தில் பன்குரா மாவட்டத்துக்கு இரு நாள் பயணம் செய்தார்.
அப்போது மத்திய ரிசர்வ் போலிஸ் உள்ளூர் காவல் துறையினருக்குத் தெரிவிக்காமல் மூன்று மாவட்டங்களில் சோதனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மத்திய அரசு தனது எல்லைக்கோட்டைத் தாண்டி மாநில விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும். மாநிலத்தில் பணி புரியும் ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு வருமான வரி மற்றும் புலனாய்வு வழக்குகளைக் காட்டி மிரட்டி வருகிறது.
இந்த மிரட்டலுக்கு அடிபணியாதவர்களின் மனைவியர்களை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்து விடுகிறது. கொல்கத்தா ஆணையராகப் பணி புரிந்த ராஜிவ் குமாரின் மனைவி பஞ்சாபுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது போலப் பலருக்கும் நிகழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி உள்துறை அமைச்சர் வரும் போது உள்ளூர் காவல்துறைக்குத் தெரிவிக்காமலே மத்திய ரிசர்வ் போலிஸ் சோதனைகளை நிகழ்த்துகிறது.
இது போல மோசமான அரசியலை யாரும் பார்த்தது இல்லை. நான் அனைத்து ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த மாநிலம் உதவும் என உறுதி அளிக்கிறேன். இந்த மாநிலத்தில் பணி புரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் எவ்வித அச்சமும் தேவை இல்லை. இந்த அரசு உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.