ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி ஆலயத்தின் நகைகள் தொடர்பாக முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார் அந்த ஆலயத்தின் இணை ஆணையர் சி.கல்யாணி.
அந்தக் கோயிலின் நகைகள், 41 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, கடந்தாண்டுதான் மதிப்பிடப்பட்டது என்றும், தொடர் பயன்பாட்டினால் ஏற்படும் சேதாரம் மட்டுமே கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோயில் நகைகளில் முறைகேடு நடைபெற்றதாக சில பக்தர்கள் மத்தியில் செய்தி பரவி பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதை மறுத்துள்ளார் கல்யாணி.
“மதிப்பீட்டின்போது, 18 தங்க ஆபரணங்கள் உடைபார்க்கப்பட்டபோது, அதில் 68 கிராம்கள் குறைந்திருந்தன. மேலும், 14 தங்கள் ஆபரணங்கள் எடைபார்க்கப்பட்டபோது, அதில் ரூ.2,454 மதிப்பிலான பழுதுகள் இருந்தன. இந்தவகையில், ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 244 என்ற அளவிற்கு எடைக்குறைவு இருந்தது.
இதேபோன்று, 42 வெள்ளி உபகரணங்கள் எடைபார்க்கப்பட்டபோது, அவற்றில் 25.811 கிராம்கள் எடைக்குறைவு இருந்தது மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களில் 43.7 கிராம்கள் எடைக்குறைவு இருந்தது. இவை மொத்தமாக ரூ.12,29,010 மதிப்பிலானவை. இவை தொடர் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவே” என்று தெரிவித்துள்ளார் அவர்.