சென்னை:
ஆன்லைன் ரம்மி விளையாடிய பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதால், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கே. பழனிசாமி, “ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய பல தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வருகின்றன. இந்த இணைய வழி ரம்மி சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசு இவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த விளையாட்டுகளைத் தடைசெய்ய நடவடிக்கை எடுத்துவருகிறது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடக்கும் வழக்கில், இந்த விளையாட்டுகளைத் தடைசெய்ய முயற்சி நடக்கிறது என்ற செய்தி அரசின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இவ்வாறு பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து ஆன் லைன் விளையாட்டுகளையும் தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்த விளையாட்டுகளை நடத்துவோர், ஈடுபடுவோரைக் குற்றவாளிகளாகக் கருதி கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் செய்ததைப்போல, ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, “ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துத்தான் ஆளுநருக்கு தீர்மானத்தை அனுப்பியுள்ளோம். இந்த விவகாரம் ஆளுநரின் அதிகாரத்தில் இருப்பதால் வேறு வழியில்லை. அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலையில், ஏழு பேர் விடுதலை குறித்து சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
“2000ல் அப்போதைய முதல்வராக இருந்த மு. கருணாநிதியிடம் ஏழு பேர் விடுதலை தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நளினியைத் தவிர்த்து, மற்றவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும் நளினிக்கு குழந்தை இருக்கிற காரணத்தால் அந்தக் குழந்தையின் நலன் கருதி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம் என அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு எல்லாம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஜெயலலிதா அவர்கள்தான் ஏழு பேருக்கும் விடுதலை அளிக்க முடிவெடுத்தார்கள். அதற்குப் பிறகு அமைச்சரவை கூடி நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைத்தோம். ஆனால், தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை அளிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது” என்று முதல்வர் விளக்கமளித்தார்.
பா.ஜ.கவின் சார்பில் நாளை நடக்கவிருந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்துக் கேட்டபோது, “சட்டத்தின்படி ஊர்வலம் நடத்தக்கூடாது. இது தொடர்பாக சட்டங்கள் இருக்கின்றன. அந்தச் சட்டங்களின்படியே ஊர்வலம் நடத்தக்கூடாது எனக் கூறியிருக்கிறோம்” என முதல்வர் தெரிவித்தார்.