வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்வு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் 3வது முறையாக காங்கிரஸ் அவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுபோல தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவரும் சென்ட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்து வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி, தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்பை எதிர்த்து போராட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரான, முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ( வயது 77) வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுடன் அங்கு காங்கிரஸ் சபைக்கான தேர்தலும் நடந்து வருகிறது. காங்கிரஸ் சபை என்பது அமெரிக்காவின் நாடாளுமன்ற சபை ஆகும். இதில் இரண்டு அவைகள் உள்ளது. ஒன்று செனட் இன்னொன்று பிரநிதிகள் சபை.
இந்த நிலையில், பல்வேறு மாகாணங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் வெளியாகி வருகிறது. அதன்படி, அமெரிக்காவின் காங்கிரஸ் அவைக்கான உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட சென்னையில் பிறந்த அமெரிக்க வம்சாவழி நபரான பிரமிளா ஜெயபால் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அங்குள்ள தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுபோல, இல்லினோயிஸ் (Illinois) மாகாணத்தில், ஜனநாயக கட்சி சார்பில் செனட்சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவர் செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக செனட் சபை உறுப்பினராக திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். டெலாவர் மாகாணத்தில் போட்டியிட்ட சாரா மெக்பிரைட் என்ற திருநங்கை செனட்டர் தேர்தலில் வென்றுள்ளார்.