நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோ பைடன் 131 வாக்குகளும், டிரம்ப் 108 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளனர். பல மாகாணங்களில் முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வருகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தல் முடிவை உலக நாடுகள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நேற்று அமைதியாக முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 74) மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ( வயது 77) போட்டியிடுகிறார். ஜோ ஜோர்கென்சன் (லிபர்டேரியன் கட்சி), ஹோவி ஹாக்கின்ஸ், (கிரீன் கட்சி) மற்றும் 7 பேர் போட்டியிட்டாலும், டிரம்ப் ஜோ பைடன் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறுபவரே ஜனாதிபதி ஆக முடியும். இந்த வாக்குப்பதிவில் கலிபோர்னியாவில் 55, டெக்சாஸில் 38, நியூயார்க் மற்றும் புளோரிடாவில் தலா 29, பென்சில்வேனியாவிலும், இல்லினாய்சிலும் தலா 20, ஓஹியோவில் 18, ஜார்ஜியாவிலும், மிச்சிகனிலும் தலா 16, வட கரோலினாவில் 15 வாக்குகள் உள்ளன. இந்த மாகாணங்கள்தான் அதிபரை முடிவு செய்யும் நிலையில் உள்ளன.
தேர்தல் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற நியூ ஹாம்ப்ஷயர் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் உள்ள 5 வாக்குகளும் ஜோ பைடனுக்கே கிடைத்துள்ளது. இது அவரின் வெற்றிக்கு முதல்படியாக கூறப்படுகிறது. அதேபோல், 12 மைல் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு நகர் மில்ஸ்பீல்டு, அதன் மக்கள் தொகை 21.அந்த 21 பேரில், 16 வாக்குகள் டிரம்புக்கும், 5 வாக்குகள் ஜோவுக்கும் கிடைத்துள்ளன. ஆக, அந்த தொகுதியில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
நேற்று வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெக்சாஸ், ஜார்ஜியா, புளோரிடா, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் வெர்மான்ட் போன்ற பகுதிகளில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுபோல கென்டக்கி, வர்ஜீனியா மற்றும் தென் கரோலினா, இன்டியானா, ஆகிய இடங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலை வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது.