தோகா
கத்தார் நாட்டில் முதல் முறையாக அடுத்த வருடம் அக்டோபர் மாதம் முதல் பொதுத் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அரசர் அறிவித்துள்ளார்.
எமிர் என அழைக்கப்படும் கத்தார் நாட்டின் தற்போதைய அரசர் எமிர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி ஆவார். அந்நாட்டின் 2004 ஆம் வருட சட்டப்படி அரசருக்கு வழி காட்டும் சுரா குழுவின் உறுப்பினர்களை வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான தேர்தல் நடைபெறவில்லை.
இந்த குழுவின் உறுப்பினர்கள் யாரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் கிடையாது. இவர்களின் அரசருக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர். கடந்த 2004 ஆம் வருடத்தில் இருந்து இந்த குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்படு வருவதால் இந்த குழு உறுப்பினர்களை அரசர் நேரடியாக நியமனம் செய்துள்ளார்
கடந்த 2013 ஆம் வருடம் ஷேக் தமிம் பதவி ஏற்றதில் இருந்தே பல சீர்திருத்தங்களை அமல் படுத்தி உள்ளார். இதில் குடியரசு, தொழிலாளர் உரிமை, பெண்களுக்கு பிரதிநிதித்துவம் ஆகியவை அடங்கும்.
சுரா குழுவின் 49 ஆம் கூட்டத்தில் எமிர் உரையாற்றும் போது, “வரும் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீண்ட நாட்களாகத் தாமதமாகி வரும் சுர குழுவின் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். இதன் மூலம் சுரா குழு மேலும் வலிமை பெறுவதுடன் மக்களின் பங்களிப்பும் அக்குழுவில் இருக்கும்.” என அறிவித்துள்ளார்.
இந்த தேர்தல் கத்தார் நாட்டில் நடைபெறும் முதல் பொதுத் தேர்தலாக இருக்கும். இந்த தேர்தலில் யார் போட்டியிட முடியும் என்பது குறித்தும் வாக்களிக்கும் உரிமை யாருக்கு உள்ளது என்பது குறித்தும் எவ்வித விவரமும் இதுவரை வெளி வரவில்லை.