சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுகிடக்கும் தியேட்டர்களை வரும் 10ந்தேதி திறக்க தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 1,112 தியேட்டர்களை திறக்க ஏற்பாடு நடந்து வருவதாக தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார். டிக்கெட் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
உலகநாடுகளை மிரட்டி வரும் கொரோனா இந்தியாவையும் புரட்டிப்போட்டுள்ளது. தற்போது தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் உள்ள நிலையில், மத்திய மாநிலஅரசுகள் முடக்கத்தில் இருந்து பல்வேறு தளர்வுகளைஅறிவித்து வருகின்றன. அதன்படி, போக்குவரத்து, மால்கள் என பெரும்பாலான நிறுவனங்கள் திறக்கப்பட்ட நிலையில், பொழுதுபோக்கு இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் 10ந்தேதி முதல் தமிழகத்தில் திரையரங்கு திறக்க பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம், தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வருகிற 10-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை பின்பற்றி தியேட்டர்களை திறக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,112 தியேட்டர்கள் உள்ளன. இதில் 400 மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அடங்கும். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அமர்ந்து திரைப்படங்களை திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய முறைப்படியே டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.