பொதுவாகவே, அமெரிக்காவின் அதிபர் தேர்தல் என்பது, ஒரு வல்லரசு என்ற முறையில், உலகின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்தான்.
ஆனால், இந்தாண்டு நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல், உலகளவில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர்களிலேயே அதிகளவில் கலவை விமர்சனங்களுக்கு உள்ளானவர் டொனால்ட் டிரம்ப்.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஹிலாரி கிளிண்டன் – டிரம்ப் மோதலில், ஹலாரி கிளிண்டன் ஏதோ ஒரு பெரிய ஜனநாயகவாதி போலவும், டிரம்ப் ஒரு பழமைவாதி போலவுமான பிரச்சாரங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிலவின.
மேலும், அத்தேர்தலில் ஹிலாரிதான் வெல்வார் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு. தற்போது, டிரம்ப், இந்தியாவின் நரேந்திர மோடி, ரஷ்யாவின் புடின், வடகொரியாவின் கிம் ஜாங் உன் மற்றும் துருக்கியின் எர்டோகன் உள்ளிட்டோருக்கு வேண்டப்பட்டவராகிவிட்டார்.
அமெரிக்காவின் ஆட்சியாளர்கள், யூத நாடான இஸ்ரேலுக்கு எப்போது‍மே ஆதரவாளர்கள்தான். அமெரிக்காவில் யூத லாபி அப்படியானது. ஆனால், ஒப்பீட்டளவில் நெருங்கிய ஆதரவு & ஓரளவுக்கு ஆதரவு என்ற நிலை இருக்கும். அதேசமயம், மிக நெருங்கியவர் என்ற இடத்தில் இருக்கிறார் டிரம்ப்.
அவரின் வெற்றியை பெரியளவில் எதிர்பார்ப்பவராக இருக்கிறார் இஸ்ரேலின் இன்றைய பிரதமர் பென்ஜமின் நேதன்யகு. டிரம்ப்பின் காலத்தில்தான், தங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டு கனவாகிய ‘ஜெருசலேம் தலைநகரம்’ என்பதை நனவாக்கிக் கொண்டது அந்நாடு.
மேலும், அமீரகம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுடன், டிரம்ப்பின் முயற்சியால், சகஜமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது இஸ்ரேலால்.
இந்நிலையில், இத்தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தால், அதனால் பெரிதும் வருந்தக்கூடிய நாடுகளில் முதன்மையானதாக இருக்கும் இஸ்ரேல். இப்படியான பல காரணங்களால், இந்தாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.