டில்லி
தம்மை வெளியேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரும்பியதாக முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கிருந்து அவர் உடனடியாக விருப்ப ஓய்வு பெற்றுப் பணி விலகினார். இது அப்போது பல சர்ச்சைகளை கிளப்பியது. சமீபத்தில் சுபாஷ் கர்க் தனது இணைய தள பிளாக்கில் தம்மை நிர்மலா சீதாராமன் சிபாரிசின் பேரில் துறை மாற்றம் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவல் கடும் பரபரப்புக்கு உள்ளாகியது. இது குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் செய்தியாளர்களிடம் இது குறித்து கர்க் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “எனது பிளாக் பதிவின் மூலம் என் மனதில் கடந்த ஒரு வருடமாக உறுத்திக்கொண்டு இருந்ததைப் பதிந்துள்ளேன். மேலும் எனது வருங்கால திட்டம் குறித்தும் தெரிவித்து இருந்தேன்.
இது குறித்து பேசும் போது நான் எனது நிதித் துறைப் பணியின் இறுதிக் கட்டத்தைப் பற்றியும் அரசு பற்றியும் தெரிவிக்க வேண்டியது அவசியமாகி விட்டது நான் பிளாக்கில் கடந்த 2019 ஆம் வருட தேர்தலுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
தேர்தலுக்கு பிறகு என்னிடம் அரசு அல்லது அமைச்சர் எப்போதும் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை பற்றிப் பேசியது இல்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றதில் இருந்தே என்னை மாற்ற விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆனால் அப்போது அது ஏனோ நிறைவேறவில்லை. அதன் பிறகு நான் மின்சக்தி துறைக்குச் செயலராக அறிவிக்கப்பட்டேன்.
எனக்கு நிதித்துறை தவிர வேறு துறையில் பணி புரிய விருப்பம் இல்லை. அதனால் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகினேன். இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த இரு வருடங்களாக அபாய எல்லைக்குச் சென்றுள்ளது. மேக் இன் இந்தியா திட்டமும் நத்தையின் வேகத்தில் நகர்கிறது. உலக அளவில் இந்திய ஏற்றுமதி குறைந்து வருகிறது.
நான் அப்போதே இது குறித்துத் தெரிவித்த கருத்துக்களால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இதற்கு முக்கிய காரணம் முந்தைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை போல அல்லாமல் நிர்மலா சீதாராமன் வேறு விதமாகச் செயல்பட்டதாகும். அவருடைய பொருளாதார கொள்கை அணுகுமுறை, திறன் உள்ளிட்டவை ஆரம்பத்தில் இருந்தே மாறுபட்டிருந்ததால் என்னால் அவரோடு பணி புரிய முடியாத நிலை ஏற்பட்டது. இதே நிலை அவருக்கும் இருந்துள்ளது.
நிர்மலா சீதாராமன் பதவி ஏற்று 35 நாட்களில் அவர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை இருந்தது. அவருடைய தலைமையின் கீழ் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் பொருளாதாரத்தில் ஏற்படவே நான் என்னால் முடிந்தவரை நிதிநிலை அறிக்கை தயாரிக்க உதவி சரியான நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டிய நடவடிக்கைகளைச் செய்தேன்.
நான் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தேன். அதற்கேற்ப நான் துறை மாற்றம் செய்யப்பட்டேன். எனக்கு நிதித்துறை தவிர வேறு துறையில் பணி புரிய விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அதன்படி நான் பணி விலகினேன்” எனத் தெரிவித்துள்ளார்.