செங்கலுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு கட்டப்பட்ட குளியல் அறை..
தூத்துக்குடியில் உள்ள பெருமாள் புரத்தில் சுகாதார தொழிலாளர்களுக்காக, மாநகராட்சி புதிய குளியல் அறை ஒன்றைக் கட்டியுள்ளது.
செங்கலுக்கு பதிலாக ஆயிரத்து 700 காலி பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு இந்த குளியல் அறையைக் கட்டியுள்ளனர்.
இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் அனைத்தும், அங்குள்ள கொரோனா தனிமைப்படுத்தும் மூன்று மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை.
இந்த பாட்டில்களை நன்றாகச் சுத்தம் செய்து, அதன்பின்னர் கடற்கரை மணலை கொண்டு பாட்டில்களை நிரப்பி, ஒழுகாமல் இருக்க அதனை மூடியால் அடைத்து , செங்கல்லுக்குப் பதிலாகக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
வழக்கமாக செங்கல்லைப் பயன்படுத்திக் கட்டப்படும் குளியல் அறையைக் கட்டி முடிக்கக் குறைந்த பட்சம் ஒரு லட்சம் வரை செலவாகும்.
ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்துக் கட்டப்பட்ட, இந்த குளியல் அறையைக் கட்ட 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானது.
பெயிண்ட் அடித்து தரை தளத்தைப் பூசி விட்டால், உடனடியாக குளியல் அறை பயன்பாட்டுக்கு வந்து விடும்.
இந்த கட்டிடத்தின் உறுதி தன்மையைப் பார்த்து விட்டு இதுபோல் மேலும் பல கட்டிடங்களைக் கட்ட தூத்துக்குடி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
-பா.பாரதி.