சென்னை: வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன் தினம் முதல் தொடங்கியது. தொடங்கிய முதல்நாளே சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தலைநகர் சென்னை கடுமையாக பாதிப்புக்குள்ளானது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை அறிவிப்புகள் தெரிவித்தன.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் , நடப்பாண்டில், கடந்த ஆண்டுகளை விட கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்குப் பருவமழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில், தமிழகம் 60% மழையைப் பெறும். அடுத்த 24 மணி நேரத்தில், தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் இடியுடன் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.