மதுரை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தண்டனை முடிந்து அடுத்த வருடம் தொடக்கத்தில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவரும், போக்குவரத்துத்துறை ஊழியர் ஒருவரும் இணைந்து, சசிகலாவை வரவேற்று ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிறை கைதி ஒருவருக்கு ஆதரவாக காவல்துறையை சேர்ந்தவர்களும், அரசு ஊழியர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியால் மதுரையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாளை (அக்டோபர் 30ஆம் தேதி) தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ள நிலையில் இந்த சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த சுவரொட்டியில், பாண்டிய நாட்டின் மன்னர் வாரிசு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகு பார்த்த சோழநாட்டுப் பேரரசி சின்னம்மா சசிகலா அவர்களே,
2021 ஆம் ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழினம் காக்க தமிழ்நாட்டு மக்களை காக்க ஆணையிடு!
ஒற்றர் படை போர் படை தற்கொலை படை தயார் நிலையில் உள்ளது
இச்சுவரொட்டியின் கீழே காவல்துறை தன்மான போராளி மா. ஒச்சாத்தேவர், பி.பில்பாண்டி, தளபதி, அரசு போக்குவரத்து கழகம் என்று குறிப்பிட்டு அவர்களது புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த சுவரொட்டி மதுரை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் இருவரும், கட்சி சார்ந்தும் சாதி அமைப்புகள் சார்ந்தும் சுவரொட்டி ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவரொட்டி ஒட்டிய அரசு ஊழியர்கள் இருவரும், விதிகளை மீறி தங்களது சாதியை முன்னிலைப்படுத்தி போஸ்டர் ஒட்டியது தவறு என கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்களா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
காவல்துறையைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் என்பவர் கடந்த ஆண்டும் இதுபோல சுவரொட்டி ஒட்டியது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel