அறிவோம் தாவரங்களை – சீந்தில் கொடி
சீந்தில் கொடி. (Tinospora cordifolia)
தென்னிந்தியா உன் தாயகம்!
பொற்சீந்தல் உன் உடன்பிறப்புக் கொடி!
மரங்களில் தொற்றிப் படரும் மருத்துவக் கொடி நீ!
அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்த கொடி, அம்ரிதா, சின்ன ரூஹா மதுபானி, தந்திரிகா, குண்டலினி எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!
சளி, அஜீரணம், வலி, சோர்வு, பால்வினை நோய்கள், தாது விருத்தி, காய்ச்சல், வீக்கம், மூட்டுவலி, நீரிழிவு, கல்லீரல், வயிற்றுப் பிரச்சனை, வாத, பித்த சுரம், சீதபேதி, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
வங்காளம், அசாம் போன்ற நாடுகளில் அதிகம் வளரும் அற்புதக் கொடி நீ!
‘அமுதவல்லி கொடி அக்காரம் உண்டிட திமிருறு மேக நோய் தீபெலாம் மாறுமே’எனத் தேரையர் போற்றிப் புகழும் திவ்ய கொடி நீ!
காமத்தைத் தூண்டும் வயாகரா கொடி நீ!
கசப்புத்தன்மை கொண்ட சிறு பூக்கொடி நீ!
சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறப்புக் கொடியே!
இதய வடிவ இலைகளை உடைய இனிய கொடியே!
அறுபட்டாலும் உயிர்வாழும் அற்புதக் கொடியே!
காற்றுநீரைஉண்டு வாழும் நேர்த்தி கொடியே!
ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் அற்புதக் கொடியே!
வாழ்நாளை நீட்டிக்கொடுக்கும் கற்பக மூலிகைக் கொடியே!
மஞ்சள் நிறப் பூப்பூக்கும் மகிமைக் கொடியே!
சுண்டைக்காய் போன்ற காய் கொடுக்கும் கவர்ச்சி கொடியே!
பவள நிறப் பழம் கொடுக்கும் பச்சைக்கொடியே! நீவிர்
பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.