சென்னை: மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தமிழகஅரசன் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு காரணமாக, தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணாக்கர்கள், மருத்துவம் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுகளிலும் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே பலமுறை தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்தியஅரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், அதை மத்தியஅரசு மதிக்காமல், எதேச்சதிகரமாக செயல்பட்டு வருகிறது.
நீட் தேர்வு காரணமாக, கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை தமிழகஅரசு அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், மாதங்கள் 3 கடந்தும், அந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் இழத்தடித்து வருகிறார். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, விரைவில், கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், ஆளுநரின் நடவடிக்கை சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகஅரசு சார்பில், 5 அமைச்சர்கள் குழு ஆளுநரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். அதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினும் கடிதம் எழுதினார். ஆனால், எதற்கும் பதில் தெரிவிக்க மறுத்து வந்த ஆளுநர், ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தான் முடிவெடுக்க 3 வாரங்கள் முதல் 4 வாரங்கள் வரை அவகாசம் தேவைப்படுவதாக பதிலளித்துள்ளார். இது தமிழக மக்களிடையே மேலும் கோபத்தை கிளறி உள்ளது.
இந்த நிலையில் மாணவர் நலன் கருதி, இந்த விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் பொதுநல வழக்கு மனுதாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ‘ தமிழகத்தில் 3054 அரசு பள்ளிகளில் 3.44 லட்சம் மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளில் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து படிப்பவர்கள். இந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவது என்பது ஆண்டுக்கு ஆண்டு மிகவும் குறைந்து வருகிறது. எனவே அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது சமநீதிக்கு முரணானது என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையை அடிப்படையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு செய்வது என கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தமிழக அரசு சட்ட மசோதாவை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என ஒட்டுமொத்த உறுப்பினர்களின் ஆதரவுடன் இயற்றப்பட்ட அந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தால் தமிழக தொகுப்பில் உள்ள 4043 மருத்துவ இடங்களில், 300 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும், இது அவர்களின் மருத்துவ கனவை நனவாக்க வழிவகுக்கும்.
எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ள மசோதாவுக்கு காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.