சென்னை: தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யும் திட்டங்கள் பற்றி சிங்கப்பூர் தூதரக அதிகாரிகளுடன் துணைமுதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். சென்னை கோட்டையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசின் உயர்திகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது,
தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆழமான தொடர்புகள் உள்ளன. கலாச்சார பிணைப்புகளும், மக்களுக்கிடையே அடிக்கடி தொடர்புகள் இருந்தபோதிலும், சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பொருளாதார உறவுநிலை இன்னும் அதன் முழு அளவினை எய்தவேண்டியுள்ளது.
தமிழ்நாடு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான இடமாக திகழ்கிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் கிழக்கு ஆசியா உட்பட குறிப்பாக, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் விரும்பத்தக்க முதலீட்டிற்கு ஏற்ற பகுதியாக தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளன. இனிவரும் ஆண்டுகளில் சிங்கப்பூரிலிருந்து பெருமளவில் முதலீட்டைப் பெற விழைகின்றோம்.
புரட்சி தலைவி அம்மா, இந்தியாவிலேயே முதலீட்டிற்கு மிகவும் உகந்த பகுதியாகவும், ஆசியாவிலேயே முதலீட்டிற்கான முதல் மூன்று நாடுகளுள் ஒன்றாகவும் தமிழ்நாட்டை மாற்றுவதையே தொலைநோக்கு சிந்தனையாக கொண்டிருந்தார். தமிழ்நாடு தொலைநோக்குத் திட்ட ஆவணத்தின் பல்வேறு திட்டப்பணிகள், பொது – தனியார் பங்கேற்பு முறையிலும், சில திட்டப்பணிகள் அரசின் உதவியுடன் முற்றிலும் தனியார் துறையினாலும் செயற்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போன்ற மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிங்கப்பூரின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து பயன்படுத்தலாம் என நான் கருதும் சில முதன்மை திட்டப்பணிகள் மற்றும் துறைகள்.
* சிங்கப்பூர் போன்ற ஏனைய வட்டார நிதி மையங்களில் நடைபெறுவது போன்றும், தேவைப்படும் ஆதரவு நல்குவதற்கும் சென்னையில் ஃபின் – டெக் மாநகரத்தை உருவாக்குதல்.
* மதுரை -– தூத்துக்குடி தொழிலக பெருவழிச்சாலை திட்டப்பணியின் ஒரு பகுதியாக, தொழிற்பூங்காக்கள், முனையங்கள் மற்றும் தொகுப்புகளை உருவாக்குதல்.
* தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் துறைமுகங்களை ஏற்படுத்துதல்.
* நுண்ணறிவு சார்ந்த போக்குவரத்து தீர்வுகள், கழிவு நீர் மேலாண்மை, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் சேவைக்கு வகைசெய்வதில் பெருமளவிலான ஒத்துழைப்பு.
* வாடகை வீடுகள் உட்பட குறைந்த விலையில் வீடுகள்.
* புராதானம் மற்றும் ஓய்வு விடுதிகளின் மேம்பாட்டுடன் இணைந்த சுற்றுலா தொடர்பான திட்டப்பணிகள்.
* மாநிலத்தில் இளைஞர்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணி கிடைப்பதையும், தொழிற்சாலைகளுக்கு திறன்மிகு மனித வளங்கள் கிடைப்பதையும் உறுதி செய்வதற்கான திறன் மேம்பாட்டு முயற்சிகள்.
* தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான முயற்சிகள்.
இத்துறைகளுள் சிலவற்றுக்கு சிங்கப்பூரும் தமிழ்நாடும் முயற்சிகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக ஒன்றுக்கொன்று பங்களிக்க இயலும் என நான் நம்புகிறேன். இது, சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாட்டிற்கிடையேயான ஆழமான பாரம்பரிய பிணைப்பினை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் வளர்ச்சியையும் செழிப்பையும் ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பு மதிப்புமிக்கதாக இருக்கும் என நான் நம்புகிறேன். மேலும், சிங்கப்பூருடனான உன்னதமான நல்லுறவினை நான் எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நிகழ்ச்சியில் தூதரக உயர் ஆணையர் சைமன் வோங், தூதரக தலைவர் பாங் கோக் தியான், முதல் செயலாளர் (அரசியல்) ஓங் சோங் ஹுய், முதல் செயலாளர் (பொருளாதாரம்) அமண்டா க்வெக், தூதர் (அரசியல்) இவான் டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.