சென்னை: நாகர்கோவில் பெங்களூரு, சென்னைபெங்களூரு இடையே 6 சிறப்பு ரயில்கள் விழாக்காலத்தையொட்டி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதற்கான முன்பதி நாளை தொடங்குவதாகவும் தெரிவித்து உள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வரும் 23ஆம் தேதி முதல் 6 சிறப்புக் குளிர்சாதனப் பெட்டி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பெங்களூருவிற்கு விழாக்காலத்தை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பயணிகளிள் வசதிக்காக பெங்களூரு மற்றும் கன்னியாகுமரி இடையே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட ரயில் நாளை (அக்டோபர் 23ஆம் தேதி) முதல் விழாக்கால சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.
அதன்படி ரயில் எண் 06526 பெங்களூரு-கன்னியாகுமரி வழித்தடத்தில் பெங்களூருவிலிருந்து அக்டோபர் 23ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதிவரை தினசரி இரவு எட்டு மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் ரயில் எண் 06525 கன்னியாகுமரி-பெங்களூரு தினசரி விழாக்கால சிறப்பு ரயில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதிவரை தினமும் காலை 10 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
அதுபோல, தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வரும் 23ஆம் தேதி முதல் 6 சிறப்புக் குளிர்சாதனப் பெட்டி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காட்பாடி, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வழியாக கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்துக்குச் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து காலை 6.00 மணிக்குப் புறப்பட்டு 11.00 மணிக்குச் சென்னை சென்றடையும். பின் மீண்டும் அங்கிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்ட இரவு 10.30 மணிக்குப் பெங்களூரு சென்றடையும்.
மற்றொரு ரயில் காலை 6.20 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் வழியாக மதியம் 12.35 மணிக்கு எம்.ஜி. ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். மறு திசையில் மதியம் 3.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 9.35 மணிக்குப் பெங்களூரு சென்றடைகிறது.
மூன்றாவது ரயில் பெங்களூருவிலிருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, கன்டோன்மென்ட் வழியாக மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகிறது. அதே போல சென்னையிலிருந்து இரவு 10.55 மணிக்கு கிளம்பி மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையம் செல்கிறது.
இதைத் தவிர, மைசூரிலிருந்து மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தஞ்சை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஓசூர், பெங்களூரு கன்டோன்மென்ட், மண்டியா வழியாகச் செல்லும். தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து விருதுநகர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஓசூர், பெங்களூரு கன்டோன்மென்ட், மண்டியா வழியாக மைசூரு ரயில் நிலையத்துக்கு தினசரி பண்டிகை கால சிறப்பு குளிர்சாதன ரயில் இயக்கப்படுகிறது.
கே.எஸ். ஆர் பெங்களூரு ரயில் நிலையம் முதல் கன்னியாகுமரி வரை மற்றொரு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவைகள் வரும் 23ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், முன்பதிவு தொடங்கியுள்ளது.