மும்பை
சிபிஐ நேரடியாக வழக்குகளில் விசாரிக்க அளித்த அனுமதியை மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றுள்ளது.
சிபிஐ அமைப்புக்கு நேரடியாக வழக்கு விசாரணை செய்யப் பல மாநிலங்கள் அனுமதி அளித்துள்ளன. அம்மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலமும் ஒன்றாகும். இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ள மாநில வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு அந்தந்த மாநிலங்களின் அனுமதி தேவைப்படாது. மகாராஷ்டிர அரசு கடந்த 1989 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அன்று இந்த அனுமதியை வழங்கி உள்ளது.
டில்லி சிறப்பு காவல்துறை அமைப்பின் விதி எண் 1946 பிரிவு எண் 6 இன் படி இந்த அமைப்பின் உறுப்பினராக உல்ல மாநில அரசு நேரடியாக சிபிஐ எந்த ஒரு வழக்கையும் விசாரிக்க அனுமதி மறுக்க முடியும். அதன்பிறகு ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போதும் தனித்தனி அனுமதி பெற வேண்டும். மாநிலத்தின் எந்த பகுதியிலும் எவ்வித நடவடிக்கையையும் மாநில அரசின் அனுமதி இன்றி சிபிஐ நடத்த முடியாது
இந்த விதியின் கீழ் நேற்று மகாராஷ்டிர அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த அனுமதி தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த டிஆர்பி ஊழல் வழக்கு விசாரணையை உபி அரசு சிபிஐக்கு மாற்றிய சில தினங்களுக்குள் மகாராஷ்டிர அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கை மும்பை காவல்துறையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.