மும்பை
யாரைக் கைது செய்யவேண்டும் என மக்களைக் கேட்பது புலனாய்வு பத்திரிகையின் வேலையா என மும்பை உயர்நீதிமன்றம் ரிபப்ளிக் டிவிக்கு கேள்வி எழுப்பு உள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலி ரியா சக்ரவர்த்தி காரணம் என சுஷாந்த் தந்தை குற்றம் சாட்டினார். இதையொட்டி ரிபப்ளிக் தொலைக்காட்சி பல செய்திகளை வெளியிட்டது.. அத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ரியாவை கைது செய்’ என்னும் ஹேஷ் டாக் வெளியிட்டு டிரெண்ட் ஆனது
இதை எதிர்த்து ரியா சக்ரவர்த்தி சார்பில் ரிபப்ளிக் டிவி மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது அந்த வழக்கை தலைமை நீதிபதி திபங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜிஎஸ் குல்கர்ணி ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் அமர்வு ரிபப்ளிக் தொலைக்காட்சியின் இந்த டிவிட்டர் பதிவுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
உயர்நீதிமன்ற அமர்வு ரிபப்ளிக் டிவியின் வழக்கறிஞர் மாளவிகா திரிவேதியிடம், “பொதுமக்களிடம் யாரை கைது செய்ய வேண்டும் எனக் கேட்பதும் இன்னாரைக் கைது செய்ய வேண்டும் என பரப்புவதும் தான் புலனாய்வு பத்திரிகையா? இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இது தற்கொலையா அல்லது விஷம் செலுத்தப்பட்டதா என விசாரணை முடிவுக்கு முன்பே இது கொலை என சேனல் அறிவித்தது ஏன்?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பி உள்ளது.