டில்லி
பிரதமர் மோடியின் கடும் விமர்சனத்துக்கு ஆளான 100 நாள் வேலைத் திட்டத்தை இந்துஸ்தான யுனி லீவர் நிறுவன தலைவர் சஞ்சீவ் மேத்தா புகழ்ந்துள்ளார்.
முந்தைய ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியில் அரசின் சார்பில் பல நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றை தற்போதைய பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நலத்திட்டங்களில் ஒன்றான மகாத்மா காந்தி கிராமப்புற கட்டாய வேலைவாய்ப்பு திட்டத்தை 100 நாட்கள் வேலைத் திட்டம் என அழைக்கின்றனர். இதன் மூலம் கிராமப்புற ஏழைகளுக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு ஊதியம் அளிக்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய வாடிக்கையாளர் தேவைப் பொருட்கள் நிறுவனமான இந்துஸ்தான யுனி லீவர் நிறுவனம் பல அழகு சாதனங்கள், சோப், வாஷிங் பவுடர் உள்ளிட்டவற்றைத் தயாரித்து வருகிறது இதைத் தவிர உணவுப் பொருட்களும் தயாரித்து வருகிறது. சென்ற ஏப்ரல் மாதம் வரை நஷ்டத்தில் இருந்த இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் 9% லாபம் ஈட்டியுள்ளது.
இது குறித்து பங்குதாரர்களுடன் காணொளி மூலம் உரையாடிய இந்நிறுவனத் தலைவர் சஞ்சீவ் மேத்தா, “சென்ற ஜூன் வரையிலான காலாண்டில் நிறுவனம் 7% நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதன் பிறகு செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிகர லாபம் 9% ஆக உயர்ந்துள்ளது இதில் அழகு சாதன பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை 15 முதல் 25% அதிகரித்துள்ளது. இந்நிலை மேலும் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த நஷ்டத்துக்கு முக்கிய காரணம் கொரோனா பரவுதலே ஆகும். இதனால் பலர் பணி இழந்து வாழ்வாதாரம் இழந்துள்ளனர். குறிப்பாகக் கிராமப்புறங்களில் இந்த நிலை அதிகமாகக் காணப்பட்டது. அத்தகைய நிலையில் மகாத்மா காந்தி கிராமப்புற கட்டாய வேலைவாய்ப்பு திட்டம் மகளுக்குப் பெரிதும் கை கொடுத்தது. அத்துடன் இலவச உணவு மற்றும் ஆதார விலை அதிகரிப்பு ஆகியவையும் கிராம மக்களுக்கு உதவி அளித்தது” எனக் கூறி உள்ளார்.