டெல்லி: ஏடிஎம்-ல் பணம் எடுக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 5 தடவையை மீறி, 6வது முறை, ரூ.5ஆயிரத்துக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் ரூ.24 கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்ற புதிய விதியை இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்த உள்ள தகவல் ஆர்டிஐ மூலம் அமபலமாகி உள்ளது.
ஏடிஎம்-ல் பயனர் ஒருவர் 5 முறை எந்தவித கட்டணமுமின்றி பணம்பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு இருப்பது தகவல் உரிமை பெறும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த புதிய விதிகள் தொடர்பாக ஆர்.பி.ஐ-யோ, வங்கிகளோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மக்களை ஏமாற்றி வந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமூகஆர்வலர் ஸ்ரீகாந்த் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக ரிசர்வ் வங்கியிடம், ஏடிஎம் கட்டணம் தொடர்பாக தகவல் கோரியிருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, புதிய விதிப்படி, ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு ஐந்து முறை பணம் எடுக்கும் முறைக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்பதும், 6வது முறையாக நீங்கள் ரூ.5000 க்கு மேல் பணம் எடுத்தால், அதற்காக கூடுதல் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்றும், அதற்கு கட்டணமாக ரூ .24 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ஏடிஎம் கட்டணம் தொடர்பாக 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏடிஎம்-ல் பணம் எடுப்பது உள்பட பல்வேறு புதிய விதிகள் இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி.ஜி.கண்ணன் தலைமையில் அதிகாரிகள் குழு கடந்த இந்தியன் ரிசர்வ் வங்கியால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் வங்கிகளின் பரிவர்த்தனைகள், ஏடிஎம் கட்டணத்தை மறுஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 22ந்தேதி குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அதைத்தொடர்ந்து, தற்போது சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்பிஐ குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்படுகின்றன. இருப்பினும், குழுவின் அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதுபோல ஏடிஎம் விதிகள் மாற்றம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கோரப்பட்ட தகவல்களில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.