டெல்லி: 30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார். இதற்காக ரூ.3737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்து உள்ளது.
நாடு முழுவதும் நவம்பர் 14ந்தேதிதீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி சந்தோஷப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில், மத்தியஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதாக அறிவித்து உள்ளது.
அதன்படி, கெசட்டட் அந்தஸ்து இல்லாத சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இதற்காக ரூ.3737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும், ஒரு வாரத்திற்குள் போனஸை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வரும் விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் என்றும் இதன் மூலமாக 30.67 லட்சம் ஊழியர்கள் பயனடைவதோடு பண்டிகை காலத்தில் பணப்புழக்கம் அதிகரிப்பதால் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்றும் தெரிவித்தார்.