சென்னை:
சிஎஸ்கே அணிக்கு 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசன் தொடங்கியபோதிலிருந்து சிஎஸ்கே அணிக்கு அடிக்குமேல் அடி விழுந்து வருகிறது. நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் விலகினார். அதைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் விலகினார். வீரர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். அனைத்தையும் கடந்து வந்தால் ஐபிஎல் தொடரில் தோல்விக்கு மேல் தோல்வி.
இந்நிலையில் காயத்தால் அவதிப்பட்டு வந்த சிஎஸ்கே அணியின் டெத்பவுலர் ஸ்பெஷலிஸ்ட், ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் சொந்த நாட்டுககுச் செல்ல உள்ளார்.
சிஎஸ்கே அணியில் ஹர்பஜன் சிங், ரெய்னா இருவருமே முக்கியமானவர்கள்தான். இல்லை என்று கூறவில்லை. ஆனால், அவர்களின் தனிப்பட்ட விஷயங்களையும், கோரிக்கைகளையும், முடிவுகளையும் மதிக்க வேண்டும். மூத்த வீரர். இளைய வீரர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
கரீபியன் லீக் தொடரிலிலிருந்தே காயத்தால் அவதிப்பட்ட பிராவோவால் பல போட்டிகளில் விளையாட முடியவில்லை. கரீபியன் லீக்கில் டிரிபாகோ நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளங்கிய பிராவோ இறுதிப் போட்டியில் பந்துவீசவும், பேட்டிங் செய்யவும் முடியாதது தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
காயம் காரணமாகவே சிஎஸ்கே அணியின் முதல் 3 போட்டிகளில் பிராவோ பங்கேற்கவில்லை. இதனால் லுங்கி இங்கிடி, ஹேசல்வுட் பயன்படுத்தப்பட்டாலும் அது ஒத்துவரவில்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து பிராவோ அணியில் இடம்பெற்று வந்தார்.
ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடைசி ஓவரை பிராவோ வீச முடியவில்லை. இதனால் கடைசி ஓவரை ஜடேஜா வீசவேண்டிய சூழலில் அதுவே டெல்லி அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான பிராவோ கடைசி ஓவரில் யார்க்கர், நக்குல் பால், வைட் யார்க்கர் என விதவிதமாக பந்துவீசி எதிரணி வீரர்களைத் திணறடிக்கும் திறமை கொண்டவர். 6 போட்டிகளில் இதுவரை பிராவோ 19 யார்க்கர்களை வீசியுள்ளார்.
பிராவோவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சிஎஸ்கே அணிக்கு அடுத்த பெரும் பின்னடைவாகும். ஏற்கெனவே தனிப்பட்ட காரணங்களால் ரெய்னா, ஹர்பஜன் இருவரும் போட்டியிலிருந்து விலகிவிட்டநிலையில் பிராவோவும் விலகியது அணியை முன்னோக்கி நகர்த்துவதில் சிரமத்தை அளிக்கும். ஆல்ரவுண்டர் இல்லாத சூழலை உருவாக்கும்.
இம்ரான் தாஹிர், மிட்ஷெல் சான்ட்னர் இருவரில் ஒருவரை அடுத்த போட்டியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. இதில் கடந்த சீசனில் பர்பிள் தொப்பி வென்ற இம்ரான் தாஹிரை இதுவரை ஒரு போட்டியில்கூட சிஎஸ்கே அணி களமிறக்காதது ஏன் எனத் தெரியவில்லை.